4/3/11

தாய்த் தமிழே!

                  


தமிழ்க் கூடலின்  நாயகி நீ

தலை மொழிகளுக்குள் தலைவி  நீ

ஆயிரம் காலப்  புதையல் நீ

அள்ள அள்ளக்  குறையா அமுதக் கலன்  நீ !


இனிக்கவில்லை இன்னபிற இலக்கியங்கள்

நாட்டமில்லை நாடாளும் மொழிகளிலே

தாயிருக்க அடுத்தவளை அணைப்பேனா?

நீயிருக்க நினைப்பேனா வேறு மொழி!


தாயகத்தை  விலகி விட்டேன்

உயிர்த் தந்து மொழி தந்த-

தாயை விலகி விட்டேன்!

அறிவுத்  தந்து ஆற்றல் தந்த-

தந்தையை விலகி விட்டேன்

நினைவெல்லாம் நீக்கமற நிறைந்த

உன்னை விலகேன் கனவிலும் !


அளவில்லா அன்புடன் கணவன்

ஒப்பிலாச் செல்வமாய் பிள்ளை

நீங்கா நினைவுகளாய் தாய்த் தந்தை

நினைக்க வேண்டிய உயிர்களாய் உறவுகள்!

நீ மட்டும் உடலோடு ஒட்டிய உயிராய் !



நாள்தோறும் ஆயிரம் சுவைகள் நாவில்-ஆனால்

அம்மாவின் சுவை மட்டுமே தேனாய்!

நாள்தோறும் ஆயிரம் மொழிகள் செவியில்-ஆனால்

நீ மட்டுமே தீம்பழமாய்!


நெஞ்சமெனும் வானில் செங்கதிரானாய்

நேசமுள்ள மனதில் நினைவலையானாய்

எண்ணமெனும் காகிதத்தில் எழுத்தானாய்-என்

துயிலிலும்   நீயே கனவானாய் !


தேனாய்,தெள்ளமுதாய்,

தெவிட்டாத இன்பமானாய்!

மானே உந்தன் அழகினிலே

மயங்கி நின்றேன் நான் என்பேன்!


நான் மட்டுமா? நிமிர்ந்து பார்த்தேன்

நிற்க இடமில்லை,நோக்க ஒளியில்லை

நேசமாய் உன் பிள்ளைகள்!

நூறில்லை, .ஆயிரம் இல்லை

எண்ணுவதற்கு எண்ணுமில்லை

நிம்மதியாய் நீ இரு,

குறைவில்லை நாங்களிருக்க !


தரணியெல்லாம் தவழ்ந்து வரும் தமிழ் மொழியை நாமும் கையிலெடுத்து கொஞ்சி மகிழ்வோம் ,நம் பிள்ளைகளும் தமிழோடு சேர்ந்து வாழ வழி காணுவோம் !









































No comments:

Post a Comment