10/9/12

மூழ்கிய டைட்டானிக்கின் மூழ்காத நினைவுகள்!

மூழ்கிய டைட்டானிக்கின் மூழ்காத நினைவுகள்!

டைட்டானிக் இந்த பெயரைக் கேட்டாலே நாம் அனைவரும் உணர்ச்சிவசபட்டுதான்    போவோம், அத்தகைய அழகான
உணர்ச்சி காவியமான   டைட்டானிக்  திரைப்படமே நம்மை இந்த அளவுக்கு ஆட்கொண்டதென்றால் இதற்கு மூலாதாரமாக இருந்த உண்மை நிகழ்வு எந்த அளவு மனதை உருக்க கூடியதாக  இருந்திருக்கும்.ஆம்  1911  ஆம் ஆண்டு மே 31  நாள் வெள்ளோட்டம் விடப்பட்ட டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15 , 1912 ஆம் ஆண்டு தனது கம்பீரமான பயணத்தை தொடங்கியது .
                       
                    ஆர் எம் எஸ் .டைட்டானிக் எனப் பெயரிடப்பட்ட வட அமெரிக்காவின் பெல்பாஸ்ட் நகரில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் தான் அப்பொழுது உலகிலேயே மிகப் பெரிய முதல்  பயணிகள்  நீராவிக்  கப்பலாகும்.இந்தக் கப்பல் மூன்று வகுப்புகளைக் கொண்டிருந்தது,முதல் வகுப்பில் கோடீஸ்வரர்களும் ,மூன்றாம் வகுப்பில் அமெரிக்காவில் குடியேறச் செல்பவர்களும் இருந்தனர். முதல்   வகுப்பிற்கான பகுதியில் நீச்சல் குளம் ,உடற்பயிற்சி மையம்,சிற்றுண்டி நிலையம்
கட்டண நூலகம் போன்ற அனைத்து  வசதிகளும் இருந்தது.வெளி உலகத்தோடு தொடர்புக்கொள்ள வயர்லெஸ் தொலைபேசி,மற்றும் 2  மார்கோனி வானொலி போன்றவையும் இருந்தது.மேலும் முதல் வகுப்பில் 3  மின்தூக்கிகளும் (elivetor )  இரண்டாம் வகுப்பில் 1  மின் தூக்கியும் இருந்தது. மூன்று வகையான 20  உயிர்காக்கும் படகுகளைக் கொண்டதாக அமைந்த  டைட்டானிக்கின் மொத்த
 பயணிகளில் மூன்றில் 1  பங்கை மட்டுமே அந்த படகுகள் கொள்வதாக இருந்தது. 

 டைட்டானிக் தனது முதல் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் நகரை நோக்கி ஏப்ரல் 10 ,1912  ஆம் ஆண்டு புதன் கிழமை தொடங்கியது .கிளம்புவதற்கு முன்னே 1  மணி நேரம் தாமதித்து கிளம்பிய டைட்டானிக் இடையில் பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் நின்று 2 ,240 பயணிகளை ஏற்றிக் கொண்டு  நியுயார்க்கை நோக்கி பயணித்தது.
                           ஏப்ரல் 14 ஆம் நாள்,ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை குறைந்து
கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது .
நன்றி :விக்கிபீடியா
                               

4/28/12

இனி ஒரு புரட்சி செய்வோம்


                                        

 அப்பப்பா என்ன வெய்யில் என அலுத்துக்கொண்டே வந்து நாற்காலியில் அமர்ந்தார் திருநாவு ,ரெண்டு நாளா ஒரே மழை,எல்லாத்துக்கும் சேத்து இன்னிக்கு  வெயில் மண்டைய பிளக்குது எனக் கூறிக்கொண்டே தொலைகாட்சி பெட்டியை
இயங்க செய்தார் ,அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதத்தைப் பற்றிய
  செய்தி ஒளிபரப்பானது ,மனதையும் மீறி வாய் வரை வந்த சிரிப்பை அடக்க வேண்டாம் என சத்தமாக சிரித்தே வைத்தார் .

தொலைபேசி மணி ஒலித்தது   தாமரை ஓடி வந்து வந்து எடுத்தார் ,அப்பாவா?வேற என்ன செய்வார் வீட்டுகுள்ள வந்தவுடன் செய்தி பார்க்கிறார் என புலம்பல் ஆரம்பித்தவுடனே பேசுவது எனது அருமை மகள் என்று முடிவு செய்தேன் ,குடு இப்பிடி என தொலைபேசியை வாங்கி என்னம்மா ?மாப்ள வேலைக்கு போயாச்சா?பாப்பா   எங்க கூப்பிடு என்றார் ,அது இருக்கட்டும்பா உங்க ரெண்டு பேருக்கும் பாஸ்போர்ட்டுக்கு விசாரிக்க சொன்னேனே  என்ன ஆச்சு என்ற மகளிடம்   அது  விசயமாதான்மா கொஞ்சம் சான்றிதழ் எல்லாம் தேவ பட்டுச்சு    அதான் நம்ம ஊருக்கு போய்ட்டு வந்து உள்ள நுழையறேன் என்றார்,

என்ன ஆச்சு என்ற  மகளிடம்  வெகு சுவாரசியமாக கதை சொல்ல ஆரம்பித்தார் திருநாவு,நான்  சான்றிதழுக்காக அணுக வேண்டிய அரசாங்க அலுவலகத்திற்கு ,முன்பு    எத்தனையோ முறை சென்று இருக்கிறேன்  ,எனவே சட்டை பையில் பணம் இருக்கிறதா ?என தடவி பார்த்துக் கொண்டேன்  ,பக்கத்துக்கு  கடையில் இப்ப இருக்க  அய்யா எப்பிடிப்பா? என்றேன் .கடைக்காரர், ரொம்ம்ம்ப கை சுத்தாங்க ,காச கையால தொடவே மாட்டாரு  அதனால இந்தாங்க என 1 காகித உறையை நீட்டினார் , இதுல போட்டுக்கங்க என கூறி சிரித்தார் ,மேலும் உறை இரண்டு ரூபாய் என்றார்,நல்ல வியாபாரம் என்று கூறிக் கொண்டே மனதில் ஒரு முடிவுக்கு வந்தவனாய் இல்லப்பா அதுக்கு அவசியம் இருக்காது என்ற என்னிடம் போற வேலை நல்லபடியாக முடிஞ்சுருங்க என வினயமாக  கூறினார் கடைக்காரர்.
             
                       உள்ளே நுழைந்து நான் ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க  ஊழியர் என அறிமுகபடுத்திக் கொண்டேன்,உடகாருங்க என்ன வேலையா வந்தீங்க என்றவரிடம் எனக்கு தேவையான  விவரத்தைக் கூறினேன் ,ரொம்ப    பழைய
காகிதங்க தேடணும் திங்கள் கிழமை வாங்க உங்களுது இருக்கானு பாத்து
வைக்கறேன் என்றார்.கொஞ்சம் தண்ணி கிடைக்குங்களா? என்ற என்னை
இருங்க என்று சொல்லிவிட்டு  உதவியாளரை அழைத்தார் .
                      
                             பாருங்க நம்ம அன்னா ஹசரே எப்படி ஒரு அகிம்சை புரட்சி பண்றாரு ஊழலுக்கெதிரா என்ற  என்னை வித்தியாசமாக பார்த்து விட்டு ,

            இதெல்லாம் தேவையில்லாத வேலைங்க இவரால மட்டும் இதெல்லாம் ஒழிக்க முடியுமா?காசில்லாம கல்ல கூட நகத்த முடியாதுங்க
  இந்த காலத்துல , உங்களுக்கு நான் சொல்லனுன்னு இல்ல என்றார் என் முகத்தை ஊடுருவியவாறே .
                              இப்படியெல்லாம்  நாம நினைக்கிற  நாலதாங்க லஞ்சம் ஒழியல,
     இந்த போராட்டத்த பத்தின விழிப்புணர்வு குறிப்பா நம்ம தமிழ்நாட்ல குறைவா இருக்கு ,அதுக்காகத்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியரெல்லாம்
   சேர்ந்து ஒரு பேரணி போறோம் ,இன்னிக்கு மாலை 6 மணிக்கு நம்ம
 பெரிய கோவில்ல தொடங்குறோம் ,நீங்களும் வந்தா நல்லா இருக்கும் என்றேன்.                

         ஏன் சார் இந்த வீண் வேலையெல்லாம்? இந்த போராட்டமெல்லாம் சும்மா
    சார் மிஞ்சி போனா ஒரு பத்து  நாள் நடக்கும் அதுக்கு மேலல்லாம் நம்ம
 அரசாங்கம் விடாது சார்.தண்ணி குடிச்சுட்டு  கிளம்புங்க என்றவரிடம்    எப்பிடியும் திங்கள் கிழமை இந்த ஊர்லதான் போராட்டம் இருக்கும் மறக்காம எடுத்து வைங்க சார் வாங்கிக்கறேன் என்ற என்னை
  மனிதர் வெறுப்பாக பார்த்து விட்டு குனிந்துக் கொண்டார் .
             

                 வந்தது திங்கள் கிழமை அலுவலகத்துக்கு வெளியே உள்ள   கடைக்கு சென்று ஒரு காகித உறை எனக் கேட்டேன் என்னை இளக்காரமாக பார்த்த கடைக்காரர்  எத்தனை  மக்களை  பார்த்திருப்போம் உங்கள மாதிரி என்றார்,

நான் சிரித்துக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.வணக்கம் சார்      செய்தி படிச்சுருபிங்கனு  நினைக்றேன் என்றேன், மேசையில் உள்ள செய்தித்  தாளை பார்த்துக் கொண்டே,அதனாலதான் இன்னிக்கு பேரணிக்குக்   கூட அவசியமில்லாம போய்ட்டு என்றேன்.மனிதர் நான் கூறுவது எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை சற்று இருங்கள் என கூறிவிட்டு தயாராக வைத்திருந்த காகித்தை என்னிடம் நீட்டி கிளம்புங்க என்பது போல பார்த்தார்,

                      நான் மனதிற்குள் அன்னா ஹசாரேக்கு நன்றி கூறிக் கொண்டே கடையில் வாங்கின காகித உறையை அவரிடம் நீட்டினேன் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்த மனிதர் உறையைப் பிரித்ததும் எதோ சொல்ல வாய் எடுத்தார்  ,அதற்குள் நான் முந்திக் கொண்டு எவ்ள பெரிய விசயங்க ,உண்ணாவிரதம் வெற்றி பெற்றதுக்கு அடையாளமா ஐநூறு பேருக்கு அன்னதானம் பண்றது நம்ம மக்களுக்கு இதெல்லாம் புரியுமா ?உங்கள மாதிரி
 நல்ல மனசோட நிறைய குடுக்க முன் வர மாட்டாங்க  என்றேன் ,மனிதர் நூறு ரூபாய் நோட்டை உள்ளே வைத்து பெரிய கும்பிடாக போட்டு என்னை அனுப்பி வைத்தார்.   
                இப்பதாம்மா  உள்ள வர்றேன் ,வந்தவுடன்  அன்னா ஹசாரே பத்தி செய்திய பார்த்தவுடன் அந்த அலுவலர் முகம் தான் நியாபகம் வந்தது அதான் சிரிச்சுகிட்டிருந்தேன் நீயும் கூப்பிட்ட  ,அடுத்த வேலை  அன்னதானம்மா    அதுக்கு ஏற்பாடு பண்ண கிளம்பனும்மா, நீ அம்மாட்ட பேசு என்ற அப்பாவை நினைத்து ஒரு நிமிடம் உள்ளம் பூரிக்காமல் இருக்கமுடியவில்லை ,அதே சமயம் இதெல்லாம் நடந்தது  அன்னா ஹசாரே என்ற மனிதனின் போராட்டத்தால் என எண்ணுகையில் அவருக்கு நம் மக்கள் எல்லோரும் செய்ய வேண்டிய நன்றிக்கடன் ஊழலை ஒழிக்க நம்மால் முயன்ற வரை லஞ்சம் கொடுக்காமலும் ,வாங்காமலும் நடைமுறை வாழ்க்கையில் நடந்துக் கொள்வதுதான் .

உதிரும் மலரிதழ்கள்

                                                        உதிரும்  மலரிதழ்கள்


அது என்னுடைய முதுகலை படிப்பின் கடைசி ஆண்டு , ஒரு சனிக்கிழமை காலை தொலைபேசி மணி அடித்தது என் பள்ளி தோழி கிருத்திகா தான் பேசினாள்,நேற்று இரவுதான்   தான் கல்லூரியிலிருந்து  வந்தேன் ,உனக்கு நேரம் கிடைத்தால் மாலை சந்திக்கலாமா ,நீ வருகிறாயா? நான் வரட்டுமா ? என்றாள்.இல்லை நானே வருகிறேன் எனக்கும்  அந்த பக்கம் தான் கடைக்கு போகும்  வேலை  உள்ளது ,என்று கூறினேன்.அவள் மருத்துவக்  கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு  எப்பொழுது தஞ்சாவூர் வந்தாலும் நாங்கள் சந்திப்பது வழக்கம்.
    
         மாலை என் இரு சக்கர வாகனத்தை அவர்கள் வீட்டு  வாசலில் நிறுத்திக்  கொண்டிருக்கும்  போதே அவளுக்கு நல்ல அர்ச்சனை விழுவது தெரிந்தது .நான் உள்ளே சென்றதும் அவளுடைய அம்மாதான் பேசினார் ,வாம்மா உன் தோழிக்கு  நல்ல வார்த்தையா சொல்லு... நம்ம சொன்னா எங்க கேக்குறா ?என பொரிந்து தள்ளி விட்டார்.
             இருவரும் மாடிக்கு போய் பேச ஆரம்பித்தோம் .ஒண்ணுமில்லடி மருத்துவ படிப்பில் இப்பொழுது எங்களுக்கு பயிற்சிக் காலம்
எனவே போன வாரம் மூன்று நாள் "எய்ட்ஸ்  " நோயால் பாதிக்கப்பட்ட
நோயாளிகளுக்கான முகாம் நடந்தது ,அதற்கு எங்கள் குழுவும் சென்றோம்.
நான் கூடுதலாக இரண்டு நாள் இருந்து அவர்களுக்கு சேவை செய்துவிட்டு வந்தேன் அதான் வீட்டில் ஒரே பூகம்பம் என்றாள்.
             
            எனக்கு அவளை பார்க்க பெருமையாக இருந்தது , அம்மாக்கு அந்த நோயை பற்றி முழுவதும் தெரியாது ,அதனால் தான் பயப்படுகிறார் , நீ எடுத்து  கூறு என கூறிக்  கொண்டிருக்கும் போதே அவள் பேச ஆரம்பித்தாள்,  ஆமாம் போ ,அம்மாக்குத்தான்   தெரியாது பயப்படறாங்க ,கூட இருக்க பயிற்சி மருத்துவர்களும் ரத்த பரிசோதனை செய்ய நீ போ ,நான் போ என ஒரே பயம், அனைத்து கையுறை ,முன்னெச்சரிக்கை உபகரணத்துடன் தான் இத்தனைக்கும் செல்கிறோம் ,என்ன செய்வது மக்கள் மனதில் இந்த கொடிய வியாதியை பற்றிய விழிப்புணர்வை கொண்டுவர வேண்டும் அதுதான் இதற்கு  ஒரே வழி என்றாள் .
               
               அந்த நோயாளிகளின் மேலிருந்த அக்கறையும் , ஒருவித பரிதாப உணர்வும் அவர்களை பற்றி மேலும் கேட்க என்னைத்  தூண்டியது , அவள் கூறிய இரண்டு சம்பவம் என் மனதைக்  கரைத்தது .நான் பரிசோதனை  செய்த ஒரு பெண் கருவுற்றிருப்பதை கண்டறிந்த பின் அந்த பெண்ணை கூப்பிட்டு என்னம்மா  இது அந்த குழந்த என்ன பாவம் செய்தது ,இருவருக்கும்  நோய் தாக்குதலை  வச்சுகிட்டு  குழந்தை கேட்குறீங்களே நியாயமா ?என கேட்டால் அவளிடமும் பதில் இல்லை தலையை குனிந்து கொண்டார், என தோழி கூறியதை கேட்கவே வருத்தமாக  இருந்தது.மேலும் , நோய் பாதிக்கபட்டு இருந்த பெண்களுக்கான  மகப்பேறு அறைகளுக்கு சென்றோம் ,அபோழுதுதான் பூத்த புது ரோஜா மலர் போல அத்தனை  அழகான ஒரு குழந்தை ,நான் மனம் நிறைய பயத்துடனே பெரிய மருத்துவரைக் கேட்டேன் இந்த குழந்தைக்கு ?" ஆமாம்  நோய் இருக்கிறது " என்றார் ,அவ்வளவுதான் அந்த பிஞ்சுக்  குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பை என்னால் எதிர் கொள்ளவே முடியவில்லை என்றாள் ,மேலும் அது என்னை பார்த்து நான் என்ன தீங்கு செய்தேன்? என கேட்பது போலவே தோன்றியது என அவள் கூற கூற எனக்கு கண்ணீர் பெருகிவிட்டது!
               
               இன்றும்  டிசம்பர் ஒன்றாம் நாள் "உலக எய்ட்ஸ்  நாள் " வந்தால் அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியவில்லை.நம் மக்கள் அனைவரும்  அந்த நோயினைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவதே இதைப் போல வாசமில்லா மலர்களின் உதிர்வை தடுப்பதற்கான ஒரே வழி என எண்ணிக்  கொள்வேன்.