9/21/10

தளிர் நிலவே

தத்தி தத்தி நடந்து வா !
தங்க குட்டி நடந்து வா !
முத்து பற்கள் காட்டியே
முயல் குட்டி நடந்து வா !
சின்ன கால்கள் சிவந்திடாமல்
சிறிது  சிறிதாய் நடந்து வா!
வண்ண பாதம்  மண்ணில் பதிய
வளர் பிறையே நடந்து வா!
தத்தி நீயும் நடக்கையிலே
தங்க கால்கள் சிவக்குதே!
தாவி நீயும் விழுகையிலே
தாயின் மனம் தவிக்குதே !
பட்டு பாதம் வலித்திடுமே
பவள மல்லி நடக்கையில்
தாங்கி நானும் ஏந்திடவா?
எந்தன் இரு கைகளில்!
எட்டி எட்டி அடிகள் வைக்க
ஏங்கி கிடந்த மனமிது !
தட்டு தடுமாறுகையில் தாவி அணைக்க
துடிக்குது!
சிட்டு குருவி போல நீயும்
பட்டு பதம் வைப்பதை
வானில் மிதக்கும் திங்களது
கண்டு ஏக்கம் கொள்ளுதே  !
கையில் கிடைத்த பொம்மையெல்லாம்
கண்டு எடுத்து அணைத்திடும் -கட்டிக்
கரும்பே உன்னை கண்டு
அஃறிணையும்  சிரித்திடும்!
குட்டி குட்டி குறும்புகளால்
கோபம் கொள்ள வைக்கிறாய்!
உன் குறு நகையின் அழகினிலே
கொண்ட கோபம் அழிக்கிறாய்!

8/2/10


                                                    மழலை பூக்கள் !

ஈரக்   காற்றால்  என்னைத்   தழுவும்
தென்றலைக்    காட்டிலும்  இதமானது
எச்சில்  கலந்த  உன்  முத்தமடி !
வசந்த  கால  மரங்கள்  என்  மீது
உதிர்க்கும்  பூக்களின்  மென்மை 
நீ தொடுவதைப்   போல்
அவ்வளவு  சுகமானது  அல்ல  கண்ணே  !
சில   நேரம்  அறியாமல் பட்ட
தீ காயத்தை விட சுட்டது
உன்  கண்ணீர் 
 என்  மேனியை!
நீ  சிரிப்பதை  தினமும் 
பார்ப்பதாலோ  என்னவோ,
பூக்களின் அழகெல்லாம்
பெரிதாய்த்  தெரிவதில்லை !
உன் கனிவான பார்வை ஒன்றால்
பொடித்துப்  போட்டாய்
என் கோபக்  கணைகளை!
எத்தனை அழுதாலும் சிரிக்காமல்
இருக்க முடியவில்லை
நீ  பேசும் மழலைக்கு முன் !
உன் மழலைப்  பேச்சைக்  கேட்கத்தான்
புல்லினமெல்லாம் எட்டிப் பார்க்கிறதோ
நம் வீட்டை?
அன்னமெல்லாம்  சொக்கி நிற்கும்
அழகான உன் நடையைக் கண்டோ? !
இறைவனிடம் ஒன்றுமில்லை
இனி கேட்பதற்கு
அவன் உன்னையே எனக்கு கொடுத்த பின்பு!



நாய் குட்டி

அழகான மழைக்  காலம் !
தூறலைத்  தூவி கொண்டிருக்கும் வெளிர் வானம் !
விடுமுறையின் விடுதலையை
தேநீரோடு பருகிக்  கொண்டிருந்தேன்!
எதோ  சத்தம் ,
எட்டிப்  பார்த்தேன் வெளியில்
அரைகுறையாய் எழுந்து நிற்கும் எதிர் வீடு
அலறி அடித்துக்  கொண்டு ஓடி வரும் தாய்
இன்று தான் உலகை எட்டிப்  பார்க்கும் நாய் குட்டிகள்
ஆமாம் அந்தத்  தாயும் நாய் இனம் தான் !
கண்ணில் நீர் தளும்ப
நெஞ்சில் எதோ அடைக்க
ஓடினேன் அண்ணனிடம்!!
இந்த சிறியவளின் சின்ன மனதை புரிந்தவன் என்பதால்
உதவிக்  கிட்டியது ஓரளவு
உணரவாய்ப் பேசினான் அண்ணன்
நாய் பிடிப்பவனிடம் !
புலம்பியபடி மூன்றில் ஒன்றைப்
புண்ணியவான்  கொடுத்தான் !
ஆனந்தத்தின் எல்லையை
அனுபவித்தேன் முதன் முதலாய் !
என்னுடன் சேர்ந்து மறைந்து நின்ற அந்தத்  தாயும்!
அம்மாவின் பழைய புடவையெல்லாம்
ஆனது பட்டு மெத்தையாய்!
கொஞ்சிக்  களித்தேன்,
குதுகலப்பட்டேன், அம்மாவை விட்டு
குட்டியைப்  பிரித்தறியாமல்!
இரவல்லம் புது உறவுடன்
அழகழகாய் கனவுகள் !
ஏக மகிழ்ச்சியில் கேட்கவில்லை
தாய் நாயின் ஓலமும் , குட்டியின் முனகலும்!
சூரியனின் கரங்களில் ஒன்று முகத்தை தழுவியது
விழித்த விழி மூட மறுக்க
எழுந்து  ஓடினேன் திண்ணைக்கு!
படுக்கையை மட்டும் விட்டு விட்டு
பாசத்தைத்  தேடி போய் விட்டது அந்த குட்டி!
மனமெல்லாம் ஆயிரம் மலையை சுமக்கும் கனத்துடன்
கருவிழியைக்  கண்ணீர் மறைக்கப்  போனேன் அம்மாவிடம்!
அம்மா அணைத்தாள்  உச்சி முகர்ந்தாள்!
பிறகு சொன்னாள் மந்திரப்  புன்னகையோடு
அந்த நாய் குட்டியும் உன் போலதானே ?
இதழோடு சேர்ந்து இதயமும் சிரித்தது !
எதிர் வீட்டில் நின்ற நாய்க்கும் , குட்டிக்கும் கூடத்தான்!