5/20/11

லீவு  விட்டாச்சு

வைகறை விடியல்
போர்வையை   உதற மனம் வாராத பிஞ்சு
தூங்கிக்கொண்டே பல்தேய்த்து,
குளித்து முடித்தும் கலையாத தூக்கம்!
அரை கண்களே திறந்த நிலையில்
பாதியாய் வாயைத் திறந்து உள்ளே தள்ளும் உணவு  
கையைக்  காட்டு,  காலை நீட்டு
என உடைகள் மாட்டிவிட்டு
முதுகிலே புத்தக பையை மாட்டுகையில்
 உனக்கு கனப்பதை விட
என் மனம் அதிகமாய் கனத்துக் கிடக்கிறது கண்ணே !
பேருந்தில் ஏற்றி விட்டு
எங்கு அமருவாய்?,என்ன பேசுவாய்?
என  மனம் நிறைய நீயே கிடக்க
அடுத்த மணி மண்டைக்குள் அடித்தது
என்ன சமைத்தால் அதிகம் சாப்பிடுவாய்?
எல்லாம் முடித்து   நிமிர்ந்து 
கடிகாரத்தைக்  கடிந்து  கொண்டு
அவசரமாய் ஆயத்தமாகி
மறுபடியும் பள்ளி பேருந்துக்காக ஓடினேன் !
முதல் நாள் முகம் பார்த்த அதே ஏக்கத்துடனே
உனக்காக கண்கள் அலைந்து கிடக்க
அம்மா என நீ அழைக்கும் போதெல்லாம்
அடி வயிற்றில் எதோ செய்வது வழக்கம் தான்
ஆனாலும் இன்று சத்தம் பலமாய்
நெருங்கி  வருவதற்குள் கத்தினாய்
 அம்மா  லீவு விட்டாச்சு
அனைத்து உச்சி முகர்ந்து நானும்
கத்தினேன் ஹய்யா லீவு விட்டாச்சு  !







சிறப்புகள் வாய்ந்த சிரிக்கும் புத்தர்!

சிறப்புகள்   வாய்ந்த சிரிக்கும் புத்தர்!

                   மே 18 ,1974 ஆம் ஆண்டு அகிலத்தையே நமது இந்தியா ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய  நாள்  ,ஆம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகித்த வல்லரசுகள்  மட்டுமே செயல்படுத்தக் கூடிய அணுக்கரு வெடிப்பு சோதனையை நிகழ்த்தி உலகத்தையே நமது பக்கம் திருப்பியது இந்தியா .ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் கனடாவின் உதவியுடன் இந்த சோதனையை இந்தியா நிகழ்த்தி அதற்கு "சிரிக்கும் புத்தர்" என பெயரிட்டது.
              இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்  பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார். தனது  அணுமின் திட்டத்திற்கு ஆதரவளித்த அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளின் நிபந்தனையை மீறி இந்தியா இதனை நிகழ்த்தினாலும் இந்த சோதனையை "அமைதியான அணுக்கரு வெடிப்பு "எனக் கூறி அவர்களது நிபந்தனையை மீறவில்லை என விளக்கம் அளித்தது .
                 ராஜா ராமண்ணாவின் தலைமயிலான மொத்தமே 75 பேரைக் கொண்ட குழு இதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டது.இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் ஒருவர் ஆவார்.டாக்டர் ஹோமி சேத்னாவின் மேற்பார்வையில் இத்திட்டம் 1967 ஆம் ஆண்டு முதல் 1974 வரை இரகசியமாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் செயல்பட்டது.
                  பாபா அணுமின் நிலையத்தில் தயாரித்த இந்த அணுகுண்டிற்கு சைரஸ் அணுஉலையில் தயாரிக்கப்பட்ட 6 கிலோ புளுட்டோனியம்  பயன்படுத்தப்பட்டது .1400 கிலோ எடையும், சுமார் 1.25 மீட்டர் விட்ட அளவும் கொண்ட இக்கருவி, அறுகோண வடிவம் கொண்டதாகும்,இதனை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் வைத்து வெற்றிகரமாக  சோதனை செய்தனர்.புத்தரின்  பிறந்தநாளான புத்த பூர்ணிமாவில் செய்யப்பட்ட இந்த சோதனையால் உலக நாடுகள் இந்தியாவிடம்  சிறிது அச்சம் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை,மேலும் இதனை எதிர்த்து கனடா அரசு இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டது.
                       இத்தகைய சிறந்த  பணிக்காக இந்திய அரசு ஹோமி சேத்னா, ராஜா ராமண்ணா, டாக்டர் நாக சௌதுரி ஆகியோருக்கு பத்மா விபூசன் விருதும் , இதர ஐந்து உறுப்பினர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்தது.இந்த மே 18 ஆம் நாள் ஒவ்வொரு  இந்தியரின் வாழ்விலும் மறக்கமுடியாத நாள் ஆகும்.(நன்றி விக்கி பீடியா )
              


 

5/19/11

aascaarin aarambam

ஆஸ்காரின்  ஆரம்பம்

               ஆஸ்கார் விருது என அழைக்கப்படும் அகாடமி விருது அமெரிக்காவில் திரைப்படத் துறையினருக்கு  வழங்கப்பட்டு வரும் மிகச் சிறந்த விருதாகும்.
மே 16 ஆம் நாள் ,1929 ஆம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருது ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 பார்வையாளர்களின்  முன்னிலையில் வழங்கப்பட்டது இதில்விருந்தினர்களுக்கான கட்டணச் சீட்டு $5  ஆகும் .1927-1928 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம்,நடிகர்,நடிகைகள் மற்றும் திரைப்படத்துறையில் பல பிரிவுகளில் சிறந்து பணியாற்றிய பலருக்குமாய்  பதினைந்து விருதுகள் அன்று வழங்கப்பட்டது .
                     








5/5/11

அன்னைத் தெரசாவின் அகலாத நினைவுகள்


                                          அன்னை  தெரசாவின்  அகலாத  நினைவுகள்

                   
    " அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம் " என்றார் ஒளவையார் .அன்னையர் தினம் என்றாலே நமது அன்னைக்கு
 அடுத்த படியாக நம் நினைவை விட்டு அகலாதவர் அன்னை தெரசா,அவரைப் பற்றிய நினைவுகளோடு சிறிது நேரம் சிறகடிக்கலாம்
வாருங்கள்!
                       
                     நாம் அனைவராலும்  வாஞ்சையோடு அன்னை என்று அழைக்கப்படும் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ
 ஆகஸ்டு 26, 1910 ஆம் ஆண்டு அல்பேனியா  நாட்டில் பிறந்தார்.இவர் தனது பதினெட்டாம் வயதில் லொரெட்டோ
சகோதரிகளின் சபையில் மத பிரசாகராக இணைந்தார் .1929 ஆம் வருடம் இந்தியாவிலுள்ள டார்ஜிலிங்கில் கன்னியர்
 மடப்  பயிற்சியை ஆரம்பித்தார் .இவர் கொல்கத்தாவில்  இருந்த பொழுது  பள்ளிகளுக்குப்  பாடம் சொல்லித்தருவதை
 விரும்பினாலும் அவர் மனது முழுவதும் வறுமையில் வாடியவர்களிடமும் , ஆதரவற்றோரிடமும் தான் சென்றது.
                      1948 ஆம் ஆண்டு வெள்ளை நிறப்  பருத்தி புடவையை அணிந்துக் கொண்டு குடிசைகளிலுள்ள 
ஏழைகளுக்கு உதவ ஆரம்பித்தார்.மோதிஜில்லில் கல்விக்கூடம் தோற்றுவித்ததின் மூலமாக ஆரம்பித்த அவருடைய சமுதாயப்
 பணி பல இன்னல்களையும் தாண்டி, வறுமையில் வாடியோருக்கு உதவுவதாக மாறியது.1950  இல் தனது முதல் சபையை,
வறுமையில் வாடி தனது அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்காகவும்,நோயுற்றவர்களுக்காகவும்  ,
அனாதைகளுக்காகவும் தொடங்கினார்.
               
                       மேலும் 1952 ஆம் ஆண்டு இந்திய அதிகாரிகளின் துணையைக் கொண்டு கொல்கத்தாவில்  பழைய
 இந்துக் கோவிலை காளிகாட் இல்லமாக மாற்றினார் ,இது இறப்பின் விளிம்பிலிருப்போருக்கு உதவுவதற்காகவும் ,இறக்க போகும்
 மனிதருக்கு அன்பையும்,நல்ல மருத்துவத்தையும் தருவதை நோக்கமாகவும்  கொண்டிருந்தது.விரைவில் அன்னை தெரசா
 தொழுநோயால் அவதிப்படுவோருக்கு உதவ சாந்தி  நகரைத் தோற்றுவித்தார்.மிசினரிஸ்  ஆப் சாரிட்டி என்ற அமைப்பின்
 மூலம் தொழுநோயால் துன்பத்துக்குள்ளானவர்களின் காயத்தை கட்ட துணியையும் , மருந்தையும்  கொல்கத்தா  முழுவதும்
 வழங்கியது.
                        1955 இல் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்'ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும்
 அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளைஞர்களுக்காகவும் தொடங்கினார்.1960 களில் இந்த அமைப்பு பல
நன்கொடையாளர்களின் உதவியால் இந்தியா  முழுவதும் தனது சேவையைத் தொடங்கியது .1970 களில்  பல உலக நாடுகளிலும்
 இவர் தனது சேவையைத் தொடர்ந்தார்.
                            இத்தனை சமூக சேவைகளையும் அவரால்  மிக எளிதாக செயல்படுத்த முடியவில்லை ,எத்தனையோ
விமர்சனங்களுக்கு மத்தியிலே போராடித்தான் வெற்றி பெற்றார் . டேவிட் ஸ்காட் அன்னை தெரசா வறுமையை அடியோடு ஒழிக்க
 முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டார் எனக் கூறுகிறார்,இப்படி
கூறுபவர்களால் இத்தகைய சேவையை செய்ய முடியுமா? என்பதுதான் நம் மனதில் எழும் கேள்வி ,
 "சொல்வது எளிது, செய்வது கடினம்" என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தகைய விமர்சனங்கள்  உள்ளது என்பதில்
 மாற்றுக் கருத்து  இருக்க முடியாது.இத்தகைய விமர்சனங்களின் பொழுதெல்லாம் "எவர் எதைக் கூறினாலும் நீங்கள்
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையை செய்ய வேண்டும் " என்றுக்
கூறியவர் அன்னை  தெரசா.
                            இவர் இந்திய அரசின் உயரிய விருதான ,பத்ம ஸ்ரீ ,ஜவகர்லால் நேரு விருது,பாரத ரத்னா
உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார் .1979 இல் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.இதைத் தவிர பல்வேறு
 நாடுகளும் அவருக்கு உயர்ந்த பல விருதுகளை அவரது சேவையைப் பாராட்டி கொடுத்தனர் .
                                                   
                 ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
                  செத்தாருள்   வைக்கப் படும் .
                                                  -திருவள்ளுவர்

 ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனே உயிர் வாழ்பவனாகக்
 கருதப்படுவான்,மாறானவன் இறந்தவனாவான்  .இந்தக் குறளுக்கேற்ப வாழ்ந்த  உயர்ந்த ஆன்மா 1997 ,செப்டம்பர் 5 ஆம் ஆண்டு
 உடல் நலக் குறைவால் உயிர் நீத்தார் .                        
                     
                       அன்னைத் தெரசா  ஒரு பெரிய சமூக சேவைக்கான ஆலமரமாக தோன்றி ,விருட்சமாகி தன்
கிளைகளைப் பரப்பி விட்டுள்ளார் ,இதற்கு கீழ் நின்று இன்றும் பயனடையும் மக்கள் பல கோடி .இன்று இந்த அன்னையர்
தினத்தில்  உலகத்தின் ஆதரவற்றோர்களுக்கு எல்லாம்  அன்னையாகத் திகழ்ந்த,மனதளவில் இன்றும் திகழ்கின்ற 
அன்னைத் தெரசாவைப் பற்றி பகிர்ந்துக் கொண்டோம் , நாமும் நம்மால் இயன்றவரை ஆதரவற்றோருக்கு
உறுதுணையாய் இருப்போம் .நன்றி .