5/5/11

அன்னைத் தெரசாவின் அகலாத நினைவுகள்


                                          அன்னை  தெரசாவின்  அகலாத  நினைவுகள்

                   
    " அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம் " என்றார் ஒளவையார் .அன்னையர் தினம் என்றாலே நமது அன்னைக்கு
 அடுத்த படியாக நம் நினைவை விட்டு அகலாதவர் அன்னை தெரசா,அவரைப் பற்றிய நினைவுகளோடு சிறிது நேரம் சிறகடிக்கலாம்
வாருங்கள்!
                       
                     நாம் அனைவராலும்  வாஞ்சையோடு அன்னை என்று அழைக்கப்படும் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ
 ஆகஸ்டு 26, 1910 ஆம் ஆண்டு அல்பேனியா  நாட்டில் பிறந்தார்.இவர் தனது பதினெட்டாம் வயதில் லொரெட்டோ
சகோதரிகளின் சபையில் மத பிரசாகராக இணைந்தார் .1929 ஆம் வருடம் இந்தியாவிலுள்ள டார்ஜிலிங்கில் கன்னியர்
 மடப்  பயிற்சியை ஆரம்பித்தார் .இவர் கொல்கத்தாவில்  இருந்த பொழுது  பள்ளிகளுக்குப்  பாடம் சொல்லித்தருவதை
 விரும்பினாலும் அவர் மனது முழுவதும் வறுமையில் வாடியவர்களிடமும் , ஆதரவற்றோரிடமும் தான் சென்றது.
                      1948 ஆம் ஆண்டு வெள்ளை நிறப்  பருத்தி புடவையை அணிந்துக் கொண்டு குடிசைகளிலுள்ள 
ஏழைகளுக்கு உதவ ஆரம்பித்தார்.மோதிஜில்லில் கல்விக்கூடம் தோற்றுவித்ததின் மூலமாக ஆரம்பித்த அவருடைய சமுதாயப்
 பணி பல இன்னல்களையும் தாண்டி, வறுமையில் வாடியோருக்கு உதவுவதாக மாறியது.1950  இல் தனது முதல் சபையை,
வறுமையில் வாடி தனது அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்காகவும்,நோயுற்றவர்களுக்காகவும்  ,
அனாதைகளுக்காகவும் தொடங்கினார்.
               
                       மேலும் 1952 ஆம் ஆண்டு இந்திய அதிகாரிகளின் துணையைக் கொண்டு கொல்கத்தாவில்  பழைய
 இந்துக் கோவிலை காளிகாட் இல்லமாக மாற்றினார் ,இது இறப்பின் விளிம்பிலிருப்போருக்கு உதவுவதற்காகவும் ,இறக்க போகும்
 மனிதருக்கு அன்பையும்,நல்ல மருத்துவத்தையும் தருவதை நோக்கமாகவும்  கொண்டிருந்தது.விரைவில் அன்னை தெரசா
 தொழுநோயால் அவதிப்படுவோருக்கு உதவ சாந்தி  நகரைத் தோற்றுவித்தார்.மிசினரிஸ்  ஆப் சாரிட்டி என்ற அமைப்பின்
 மூலம் தொழுநோயால் துன்பத்துக்குள்ளானவர்களின் காயத்தை கட்ட துணியையும் , மருந்தையும்  கொல்கத்தா  முழுவதும்
 வழங்கியது.
                        1955 இல் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்'ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும்
 அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளைஞர்களுக்காகவும் தொடங்கினார்.1960 களில் இந்த அமைப்பு பல
நன்கொடையாளர்களின் உதவியால் இந்தியா  முழுவதும் தனது சேவையைத் தொடங்கியது .1970 களில்  பல உலக நாடுகளிலும்
 இவர் தனது சேவையைத் தொடர்ந்தார்.
                            இத்தனை சமூக சேவைகளையும் அவரால்  மிக எளிதாக செயல்படுத்த முடியவில்லை ,எத்தனையோ
விமர்சனங்களுக்கு மத்தியிலே போராடித்தான் வெற்றி பெற்றார் . டேவிட் ஸ்காட் அன்னை தெரசா வறுமையை அடியோடு ஒழிக்க
 முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டார் எனக் கூறுகிறார்,இப்படி
கூறுபவர்களால் இத்தகைய சேவையை செய்ய முடியுமா? என்பதுதான் நம் மனதில் எழும் கேள்வி ,
 "சொல்வது எளிது, செய்வது கடினம்" என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தகைய விமர்சனங்கள்  உள்ளது என்பதில்
 மாற்றுக் கருத்து  இருக்க முடியாது.இத்தகைய விமர்சனங்களின் பொழுதெல்லாம் "எவர் எதைக் கூறினாலும் நீங்கள்
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையை செய்ய வேண்டும் " என்றுக்
கூறியவர் அன்னை  தெரசா.
                            இவர் இந்திய அரசின் உயரிய விருதான ,பத்ம ஸ்ரீ ,ஜவகர்லால் நேரு விருது,பாரத ரத்னா
உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார் .1979 இல் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.இதைத் தவிர பல்வேறு
 நாடுகளும் அவருக்கு உயர்ந்த பல விருதுகளை அவரது சேவையைப் பாராட்டி கொடுத்தனர் .
                                                   
                 ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
                  செத்தாருள்   வைக்கப் படும் .
                                                  -திருவள்ளுவர்

 ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனே உயிர் வாழ்பவனாகக்
 கருதப்படுவான்,மாறானவன் இறந்தவனாவான்  .இந்தக் குறளுக்கேற்ப வாழ்ந்த  உயர்ந்த ஆன்மா 1997 ,செப்டம்பர் 5 ஆம் ஆண்டு
 உடல் நலக் குறைவால் உயிர் நீத்தார் .                        
                     
                       அன்னைத் தெரசா  ஒரு பெரிய சமூக சேவைக்கான ஆலமரமாக தோன்றி ,விருட்சமாகி தன்
கிளைகளைப் பரப்பி விட்டுள்ளார் ,இதற்கு கீழ் நின்று இன்றும் பயனடையும் மக்கள் பல கோடி .இன்று இந்த அன்னையர்
தினத்தில்  உலகத்தின் ஆதரவற்றோர்களுக்கு எல்லாம்  அன்னையாகத் திகழ்ந்த,மனதளவில் இன்றும் திகழ்கின்ற 
அன்னைத் தெரசாவைப் பற்றி பகிர்ந்துக் கொண்டோம் , நாமும் நம்மால் இயன்றவரை ஆதரவற்றோருக்கு
உறுதுணையாய் இருப்போம் .நன்றி .


 

No comments:

Post a Comment