12/30/13

என் அம்மா

என் அம்மா !
             
               பாப்பாவைத்  தூங்கவைத்து விட்டு வந்து வேலையெல்லாம் முடித்து மணியைப் பார்த்தேன் மணி இரவு 12 ஆகி இருந்தது.இன்றைக்கு அன்னையர் தினமல்லவா  என எண்ணிக் கொண்டே தொலைபேசியை எடுத்தேன் அம்மாவுடன் பேச, அம்மாதான் எடுத்தாள் ஹலோ என்பதற்குள் காய்கறியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தா போதும்னு கத்தினாள், என்னம்மா அம்மு பேசறேன் என்றேன் நான்,அட அம்முக்குட்டி
என்னடா இத்தனை மணிக்கு மாப்ள பக்கத்துல இருக்காங்களா? நான் கத்திட்டேன்டி அப்பான்னு நினச்சு என்றாள் வெகுளியாக,பரவாயில்லம்மா
அப்பா எங்க என்று முடிப்பதற்குள்,உங்க அப்பதானே காலையில காபி குடிச்சுட்டு காய்கறி வாங்க போனவருதான் கடையில நின்னுக்கிட்டு 1 மணி
நேரமா அத வாங்கவா இத வாங்கவானு 10 போனு  ,போனுக்கு கார்டு போட பணம் என்ன மரத்திலையா காய்க்குது என்று பொரிந்து  தள்ளினாள் அம்மா, அதுக்காக ஏம்மா திட்டறீங்க கடைல இருக்கப்ப என்றேன் ,அவ்வுளவுதான்
வந்துட்டியா உங்க அப்பாவுக்கு வக்காலத்து வாங்க நேத்து ஆட்டோல  ஏறும்போது கொஞ்சம் கால் இடறிட்டு அதுக்கு குதிக்கறார் வானத்துக்கும் பூமிக்கும் ஆட்டோகாரர் என்னமா ஆச்சு என்றார் எனக்கு ஒரே வெட்கமா போச்சு ,நீ  உங்கப்பா வந்தோன முதல்ல இத கேக்ற என்றாள் மூச்சு விடாமல் ,இடையே மூன்று தடவை மாப்ள பக்கத்தில  இல்லையே என்று கேள்வி வேறு, அவளே தொடர்ந்தாள் மணி ரொம்ப ஆச்சோ? என ,ஆமாம் 12 .30 என்றேன் நான் ,அச்சோ தூங்கல ?என்றாள் ,அன்னையர் தின நல்வாழ்த்துகள் அம்மா என்றேன்  கடைசியாக அவள்எனக்கு பேச  இடைவெளி விட்ட மகிழ்ச்சியில்.ரொம்ப நன்றிடி பாப்பா என்றாள் வெட்கம் கலந்த மகிழ்ச்சியுடன்.போய் தூங்கு ரொம்ப நேரம் ஆய்டுச்சு உனக்கு ஒத்துக்காது ,அப்பாவும் பசி தாங்க மாட்டாங்க நான் போய் இட்லி ஊத்தறேன் என்று தொலைப்பேசியை வைத்தாள் என் அம்மா.

No comments:

Post a Comment