10/27/16

பெருமை வாய்ந்த பொன்னி நதி !

                                        பெருமை வாய்ந்த பொன்னி நதி !


பொன்னி நதி என நான் கூறும் இப்பெயர் நம் தமிழர்களுக்கு புதிதல்ல ,
இலக்கியத்திலும் நம் வாழ்விலும் நம்மோடு ஒன்றிப்போன காவிரி ஆற்றின் 
ஒரு பெயர் தான்  இது. கடவுள் கொடுத்த மண்ணையும் ,மரத்தையும் கூறு போட்ட மனிதன் , தண்ணீரையும் விடவில்லை , தானே  உருவாகி ,தள்ளாடி  தமிழகத்தை தாண்டி வந்து  தஞ்சமாய் சமுத்திரத்தை தழுவிக் கொள்ளும்  ,  சீர் மிகு காவிரியின் தொன்மையை  இக்கட்டுரை வாயிலாகக் காண்போம் .



  ‘விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும் சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை....’ 

என்னும் சிலப்பதிகாரப் பாடல்  காவிரியின் சிறப்பை எடுத்துரைக்கின்றது ..


காவிரியின் பிறப்பு :



காவிரி  ஆறு  கர்நாடக மாநிலத்தின்  மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. .  காவிரி நதியின் நீரில் பொன் தாது  அதிகம் இருந்ததால் இது பொன்னி என கூறப்படுவதாகவும்  கருதப்படுகின்றது.

கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. 'பொன்படு நெடுவரை'ப் பகுதியில் இது தோன்றுவதால் இது  பொன்னி என்று பெயர்படுகின்றது .சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் எழுதிய புறநானூற்று பாடல்  இதனைத் தெளிவுபடுத்துகிறது..


"விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும் 
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; "(புறநானூறு -166).


அணைகள் :

மேட்டூர் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

             மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.

               கிருஷ்ணராஜ சாகர் அணை மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடி என்ற இடத்தில் கட்டப்பட்டதால் கண்ணம்பாடி அணை என்று அழைக்கப்பட்டது. மைசூர் மகாராசா நான்காம் கிருஷ்ணராஜ  உடையார் நினைவாக இது பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை வடிவமைத்து கட்டியவர் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் திரு. விசுவேசுவரய்யா அவர்கள் ஆவார் .ஏமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன.கீழ் காணும் புகை படங்கள்  கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்டபோது எடுக்கப்பட்டதும் ,கட்டிமுடிக்க பட்ட நிலையில் உள்ளதும் ஆகும்.



                     








  கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும்.   திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என நான்காக  பிரிக்கிறது.பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

இதனை தவிர கேரளாவில் உள்ள பாணாசுர சாகர் அணையும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும் ,இவ்வாறு  கர்நாடகத்திலிருந்து  புறப்படும் காவிரியானது தமிழகம் ,கேரளா ,புதுச்சேரி ஆகிய அனைத்து 
அண்டை மாநிலங்களின் மண்ணோடும் ,மக்களோடும் உறவாடி ,பூம்புகாரின் கடலோடு கலக்கின்றது.


காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.
கர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
கர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ

கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை  சேர்ந்தவை.


இலக்கியங்களில் காவிரி :

"வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும் தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி " 
என பட்டினப்பாலை காவிரியின் பெருமையை எடுத்தியம்புகின்றது.

’அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த் ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்...’  என்ற புறநானூற்று பாடலின்  வாயிலாக காவிரியின் பெருமையை நம் பழந்தமிழர்கள் எவ்வகையில் போற்றி உள்ளனர் என அறிய முடிகின்றது ....
மேலும் ,
'கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை’  என மணிமேகலையும் 
‘வாழி அவந்தன் வளநாடு, மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் உயிரொப்பாய் ஆழி ஆள்வோன் பகல்வெய்யோன் அருளா வாழி காவேரி ' என சிலப்பதிகாரமும் காவிரியின் புகழை வானளாவ புகழ்கின்றது 
சங்க காலம் முதல் தற்காலம் வரை வழி  வழியாய் தமிழர்களின் தாகம் தீர்த்த காவிரியின் வரலாற்றின் ,தற்கால நிகழ்வுகள் சீர் மிகு காவிரியில் செங்குருதியை கலக்க செய்யுமோ  என்ற அச்சம் நம்மையும் அறியாமல் நம்மை வந்து கவ்விக் கொள்வதை உணர  முடிகின்றது .இக்கட்டுரையின் வாயிலாக தொன்மையும் ,பெருமையும் மிகுந்த காவிரியயை பற்றி நாம் அறிந்தோம் ,காவிரி  அனைவர்க்கும் பயன்பட்டு வேற்றுமையை களைந்து ஒற்றுமையை உண்டாக்கும்  காலம் விரைவில் வர வேண்டும் என்பதை  சிந்தையில்  நிறுத்துவோம் ! 

(நன்றி- விக்கிபீடியா .)



No comments:

Post a Comment