5/1/17

               மாற்றம் காணுவோம் ! மறுபடி செய்வோம் நம் பழைய பூமியை !


வானமும் பூமியும் விரிந்து கிடக்க
கானகத்தில் புள்ளினங்கள்  ஓசை எழுப்ப !
துள்ளி ஓடும் ஆற்று நீரில் நீராடி
திக்கெட்டும் பூமியன்னை பச்சை புத்தாடை உடுத்தினாள்  !

இத்தனையும்  நடந்து இப்பூவுலகம்  பூக்களாலும் ,புல்  பூண்டுகளாலும் நிறைந்து செழித்து மக்களும் ,மாக்களும்  மகிழ்ந்திருக்க நாம் காணும் கனவுகளெல்லாம் நிராசையாகிவிடக் கூடாது !

நீர் ,நெருப்பு ,நிலம்,காற்று,ஆகாயம், இந்த ஐம்பூதங்களும் நமக்காக ,நம்மை காக்க இயற்கை அன்னையால் உருவாக்கப்பட்டது ,நாம் பதிலுக்கு அவைகளுக்கு என்ன செய்தோம் ?

தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீரை வெளியேற்றி நீர் நிலைகளை மாசு செய்தோம் ,அதே கழிவுகளைக் கொண்டு நிலத்தில் சேர்த்து நிலத்தின் சத்துக்களை எல்லாம் அழித்தோம் ,"பிளாஸ்டிக்" என்ற மிகப்பெரிய பேயை
பயன்படுத்தி மண்,காற்று,நீர் அனைத்தின் தூய்மையையும்  பெரும்பாலும் அழித்துவிட்டோம் !பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து வளிமண்டல காற்றையும்
அசுத்தபடுத்தியாயிற்று ! மா,பலா வாழை என பச்சை மரங்களோடும் ,மூலிகைச்செடிகளோடும்  ஓடி  விளையாடிய நாம், நமது அடுத்த தலைமுறைக்கு தந்து விட்டு சொல்வதெல்லாம் அழுக்கும் ,அசுத்தமும், கூடவே நிறைய பிளாஸ்டிக்கும் பரவிய நமது பாரதத்தைத்தான் என நினைக்கும் போது  உள்ளம் விசும்புகின்றது !





தண்ணீருக்காய் வருடத்தில் பாதி நாள் அண்டை மாநிலத்தவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம் ,வீரத்  தமிழா.... நமது பழந்தமிழன் கோட்டையும்,கோபுரமும்  மட்டும் காட்டவில்லை குளங்களையும்   , அணைகளையும்  ,ஏரிகளையும் , கூட நமக்கு  விட்டு விட்டுச்  சென்றான் ,ஆனால் நீயோ !!! வெட்கம் ...பணம் என்ற காகித தாளுக்காய் ஆறுகளை விற்றாய்,குளங்களை விற்றாய்,உணவு ஆதாரமாய் திகழும் விவசாய நிலங்களை கூறு  போட்டு விற்றாய் ,வெளிநாட்டுக்காரன் தூக்கி எரியும் காசுக்காய் இருக்கும் கொஞ்ச, நஞ்சநீரையும் நஞ்சு கலந்த குடி பானத்திற்கு விற்க முற்பட்டாய் ! ஐந்து அறிவு உள்ள விலங்கு கூட தனது உடலுக்கு எந்த செடி ,கொடி  தீங்கு விளைவிக்கும் என அறிந்து அதை முகர்ந்து பார்த்து விலகிச் செல்லும் ஆனால் நாமோ எது உடலுக்கும் சுகாதாரத்துக்கும்  தீங்கு விளைவிக்கும் எனத் தெரிந்தும்  தேடி பார்த்து அதை குடிக்கவே ஆசைப்படுகிறோம்.

நமது நீர் நிலைகளில் வளர்ந்த தாமரையும்,அல்லியும்  நீரை ஆவியாக விடாமல் தடுத்து  மிகச் சிறப்பாக நீரை சேமித்து வைக்க உதவியது,அதை எல்லாம் மறந்த நாம் இன்று தெர்மகோலை போட்டு அனைத்து நீரையும் வீண் செய்து உலக அளவில் கேலிக்குள்ளாகி நிற்கின்றோம்.நமது பண்டைய தமிழனின் அறிவியலையும் ,அறிவையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்வதில் தவறில்லையே !

 சிந்தித்து பாருங்கள்  நாளை நமது சந்ததியினர் மாடி வீட்டில் அமர்ந்து அதில் உள்ள கல்லையும் ,மண்ணையுமா உண்டு நஞ்சு கலந்த
குடிபானத்திலா  குளிக்கவும் ,குடிக்கவும் செய்வார்கள்.!விழித்து கொள்
மனிதா... நமக்கென  நாமே  குளங்களையும் ,ஏரிகளையும் நம்  ஊரிலே
உண்டு செய்வோம்  ,உணவு ஆதாரமான விவசாயத்தில் மீண்டும் இறங்குவோம்  ,ஊர் முழுவதும் மரங்களை உண்டு செய்வோம் ,"பிளாஸ்டிக் " என்ற பேயை  நமது உலகத்தை விட்டு ஓட்டுவோம். இந்த புவியை காப்போம்!!


விழிப்புணர்வு தரும் தமிழரின் நிகழ்வுகள்!

1. இன்று மக்களிடையே மரங்களை பற்றிய விழிப்புணர்வு அதிகம் வந்துவிட்டது ,தமிழகத்தில் கல்யாண வீடுகளில் தாம்பூலத்தில்
மரக்  கன்றுகளை  தரும் வழக்கம் அதிகரித்துள்ளது.

2. அண்டை நாடுகளில் அமர்ந்து கொண்டு ஆறுகள்,குளங்களை காப்பாற்றுங்கள் என வெறும் வாயால் கூறுவதோடு நில்லாமல் சிகாகோவில் உள்ள தமிழர்கள் ஒன்று கூடி  "நம்பிக்கை விழுதுகள்" என்ற அமைப்பை விவசாயிகளை காப்பதற்காகவே உருவாக்கி முதற்கட்டமாக ஈரோட்டில் உள்ள 10 ஏரி,குளங்களை  தூர் வாரும் பணியைதொடங்கி உள்ளார்கள் .

3.பாரத பிரதமரின் உத்தரவு படி நமது நீராதாரத்தை அழிக்கும் கருவேல மரங்களை அனைத்து இடங்களிலும் வெட்டி வருகின்றனர்.

4.இன்றும் பல இடங்களில் பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதை தவிர்த்து காகித பை ,மற்றும் துணி பைகளை வலியுறுத்துகின்றனர்.( எ.கா ) ட்ரடேர் ஜோஸ்(வட  அமெரிக்கா)







No comments:

Post a Comment