6/21/20




அனைவருக்கும் தந்தையர் நாள் நல்வாழ்த்துகள்!

என் அப்பா!


உம்   
சித்தமும் பிழைத்துக்
கிடக்கும் என் 
ஒத்தை அழைப்புக்காய் என 
நித்தமும்  உன்னை 
நான் அழைக்கின்றேன் 

அலைபேசியிலே!

பள்ளி சென்று வந்து
நான் சொன்ன கதை போல-நீர்  
சொல்ல துடித்த முழு நாள் 
கதையும்  அந்த 1 மணி துளிக்குள்ளே!
அதுவும்,
சும்மா இருக்க மாட்டிங்களா? என்ற 
அம்மாவின் செல்ல அதட்டலுக்கு 
பயந்தபடியேதான் !
வாய் விட்டு நித்தமும் சிரிக்கிறேன் 
சேய் போன்ற உம்  குறும்புகளைக் கண்டு!

சொன்னதையே சொல்லும் 
சின்னப் பிள்ளை நீங்கள் 
தன்னையே மறந்து எம்மை 
எண்ணும் செல்ல கிள்ளை நீங்கள்!

பாசம் காட்ட மட்டுமே தெரிந்த உமக்கு 
காசு பணம் பார்க்கத்  தெரியாது !
நேசமாய் நான் கேட்டதெல்லாம் 
தேசம் தாண்டியும் கொணர்ந்திடுவீர்!

மீன் குழம்பு என்று சொல்லாதே 
வீணாய் பிள்ளை ஆசைப்படுவாள்-என 
தேனாய் நீ கூறும் சொற்களை 
கேட்ட போதெல்லாம் 
மண்ணுக்கும் விண்ணுக்குமாய் நீர் 
உயர்ந்து  தெரிவீர் 
என் மனச் சுவரை இடித்து கொண்டு  !

விடுடா, அப்பா இனி செய்ய மாட்டேன் என
கோபமாய் நான் திட்டும்போது  
பாவமாய் நீர் சொல்கையிலே 
வாரி அணைத்து கட்டிக்  கொள்ள-என் 
பாவி மனம் துடி துடிக்கும்!

தினம் எழுகிறேன் என் 
படுக்கையை விட்டு
மனம் முழுதும் தலை கோதும் 
உம்  கைகளுக்காய் ஏங்கி கொண்டே

இதயத்தில் அடைப்பு உமக்கு 
கடிந்து கொள்கிறேன்
பொல்லாத ஆண்டவனை 
உம்  இதயம் என்னிடம் உள்ளபோது 
எப்பொழுது களவாடினான்
அக்கள்வன்!
இனியொரு முறை தவறாகாது 
கவனமாய் உனை நான் காப்பேன்
நெகிழாதீர்கள் அப்பா!
சுயநலக்காரி நான்,  
ஏனெனில் என் உயிர் உன்னிடத்தேயல்லவா!  

ஆண்டுகள் பல நீர் வாழ்ந்து 
எம்மை நீர் காக்க வேண்டும் 
உம்  செல்ல அம்முகுட்டிக்காய்!
ஆசையாய் ஆயிரம் முத்தங்களை 
அழைப்பினில் தருகிறேன்!

நன்றி!
த.ச.பிரதீபா பிரேம் 

No comments:

Post a Comment