6/22/20

அநீதிக்குத் தீர்வு கொடு

அநீதிக்குத் தீர்வு கொடு

கருக்கலான பொழுதது
காட்டு மரங்கள் புடை சூழ
களிறும், பிடியுமங்கே
காதல் மொழி மொழிந்தனரே!



செவி கேட்கும்
செய்தியும் மெய்தானோ?
செல்லச் சிணுங்களிலே
செவந்து நீயும் போவதென்ன!

கள்வரே நீர் கேட்ட
களிசெய்தி உண்மைதானே!
காத்திருந்த நாளும் வர இன்னும்
காலாண்டு பொறுக்கணுமே!

முத்தான முத்தே உன்னால்
பித்தாகி நானும் போனேன்
சத்தமாய்ச் சொல்வேனடி நம்
சாமி கொடுத்த பிள்ளையென்று!

அதுக்குத்தான் ராசாவே
அடக்கி வைத்தேன் ஆர்வத்தையும்
அன்பான ராசா உன்னை
அணை போட முடியாதே!

விடியலும் வந்ததிங்கே
விரைவாய் நடை போடு
வீணாய்த் தொல்லை வரும்
வேறெவரும் பார்த்து விட்டால்!

பசியுமது பொறுக்கவில்லை
பகல் முழுதும் உணவுமில்லை
பசித்திருக்க உனையும் விடேன்
பத்திரமாய் அமர்ந்து இரு
பார்த்து வரேன் உணவதனை!

மனிதர்கள் கண்ணில்
மாட்டிவிட்டால் பெரும் துக்கம்
மங்கிய வெளிச்சம் போவதற்குள்
மன்னவனே நீயும் வா!

நெடுநேரம் ஆனதென்ன
நெஞ்சமும் பதைப்பதென்ன
நிலைகெட்ட மனமுமது
நெருடலைத் தருவதென்ன!

ஐயகோ ஒரு மனிதன்
அருகினில் வருகிறானே
அச்சமுறத் தேவையில்லை
அரு உணவும் கொடுக்கிறானே!

பழமுமதைக் கொடுத்து விட்டு
பாசமாய்ப் பார்க்கிறானே
பாவி நானும் அவனைத்தான்
பழுதாய் எண்ணித் தவறிழைத்தேன்!

மென்று நானும் பழத்தைத் தின்ன
மிரண்டு போனேன் அது வெடிக்க!
நல்லவர்கள் நாட்டில் இல்லை -நான்
நம்பியதில் நியாயமில்லை !

என்னவனும் எனைத்தேடி
எந்நொடியும் வரக் கூடும்
என் துயர நிலை அவர் கண்டால்
துடி துடித்துவிடக் கூடும்!

ஆண்டவனே உன்னிடமே
அழுது நானும் முறையுமிட்டேன்
ஐந்தறிவு யானைகளை
ஆறறிவு மனித மிருகம் கொன்றதுவே
அநீதிக்குத் தீர்வு கொடு
அகிலத்தினின்று எனக்கு விடை கொடு!

நன்றி,
த.ச.பிரதீபா பிரேம்.



1 comment:

  1. கண்டனத்திற்குரிய செயலைச் சாடியது... மிகச் சிறப்பு மா... நடையும் அழகு...வாழ்த்துகள்...ரவிஜி...

    ReplyDelete