7/3/20



குழந்தைகளை வன் புணர்வு செய்வதை நிறுத்துங்கள் அரக்கர்களே! சட்டத்தின் கை இறுகட்டும்  சாத்தான்களிடமிருந்து சின்னஞ்சிறு பிள்ளைகளைக் காக்க!



குருதி கொதிக்குதடி கண்ணே!

குருதி கொதிக்குதடி கண்ணே!
உன்னைக் குதறிய
பேய்களைக் கொல்ல 
குருதி கொதிக்குதடி கண்ணே! 
என் எழுதுகோலை
எடுத்தேன்,
என் பேனா மையிற்குப்
பதிலாய் அது 
குருதியைக் கொப்பளிக்கிறது!

கண்டம் கடந்துக் கேட்கும்
குழந்தைகளின் கதறல் 
உன் செவியைச் 
செவிடாக்கவில்லையா
என என் காதைத் துளைக்கும்
கேள்விக் கணைகள்!

உனக்காய் நான்
என் செய்ய போகிறேன் என
என் மனதில் எழும்பும்
வேள்விக் கணைகள்!
அய்யகோ!!
அப்பனே பிள்ளையை
அல்லல்படுத்தினான் 
செய்தியும் இப்படி!!
மனக் கண்முன்னே
மானாய் ஓடிய பிள்ளை 
மாண்டு போன காட்சி கண்டேன் 
கண்கள் கண்ணீரை
தாரை தாரையாய்ப் பொழிகிறது! என் 
இருதயம் வெடித்துச் சிதற 
அனுமதி கேட்கிறது,
காமுகனைக் கொல்ல!

துடிக்கும் கைகளை 
அடக்குகின்றேன்!
அலைகின்றேன்,
உறங்க மறுத்து 
நடை பிணமாய்! 
அநீதி அடியோடு ஒழிய
ஆவண செய்
அரசாங்கம் சட்டம் இயற்ற 
என உள்ளம்
இடிக்கிறது!!
ஓ! எம் மாந்தர் கூட்டமே 
ஓலமிடும் மாதரின் அழுகுரல் 
கேட்கிறதா?
பிறந்த பிள்ளை முதல் 
நாளை இறக்கும்
கிழவி வரை ...அய்யகோ 
எங்கேயடா உள்ளீர்கள் 
நீங்களெல்லாம்?
என் சொல்ல!
ஐந்தறிவு மிருகம் கூட
அன்பிற்கடங்குமடா,
அற்பப் பித்தர்களே!
மாண்ட நம் மாதர் குலம் என் 
முன் மண்டியிட்டு
அழக் கண்டேன்!!
எரிமலையாய் 
எழுவோம் வாரீர்!
எம் குல மாதரை 
காப்போம் வாரீர்!
எதற்கும் அஞ்சோம்!
எவர்க்கும் அஞ்சோம்!
அலைகடலெனப் புறப்படுவோம்!
அநீதியை நாம் தகர்த்திடுவோம்!
எதைச் செய்தால் 
காமுகன் கலங்குவான்?
அதை செய்வோம் வாரீர்!
பிறக்கும் இப்புத்தாண்டில்
மாதர் எவரும் இப்படி 
இறப்பதற்கில்லை 
என உறுதி பூணுவோம் வாரீர்!!
மனித இனமே 
மலை போல் திரண்டு வா!
மனிதத்தைக் காப்போம் வா!
மாக்களைக் கொல்வோம் வா!
குருதி கொதிக்குதடி கண்ணே!
உன்னைக் குதறிய
பேய்களைக் கொல்ல 
குருதி கொதிக்குதடி கண்ணே!

த.ச.பிரதீபா பிரேம்.

1 comment:

  1. உணர்வுப் பூர்வமாகக் கொதித்தெழுந்தது... மகிழ்ச்சியளிக்கிறது...வாழ்த்துகள் மா...ரவிஜி...

    ReplyDelete