என்ன ஒரு ஆளுமை? என்ன ஒரு பேச்சு? தமிழ் ஆளுமை திருமதி பர்வீன் சுல்தானா அவர்களைப் பற்றித்தான் பேசுகின்றேன்.அவரை வரவேற்று கவிதை படிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பை பெரும் பேராக எண்ணுகின்றேன்.
மூன்றாவதாய் முகிழ்ந்தெடுக்கப்பட்ட
நல் முத்து
உருதின் வழிப் பிறந்த
தமிழ்த் தென்றல்!
உன்னைப் பெற்றத் தாயின் அடிவயிறு
மகிழ்ந்துப் போய்தான் நிற்கும்
மாசில்லா மாணிக்கத்தை
மண்ணிற்குத் தந்தமையை எண்ணி!
நாவினில் தமிழ் மொழியைத் தவழ விட்டு
நாட்டினரை இவர் படுத்தும் பாடு அப்பப்பா!!!
மயங்கித்தான் போய்க் கிடக்கின்றோம்,
தமிழன்றி மறுநினைவே
ஏதுமின்றி இவர் உரையைக் கேட்டு!
அப்படி என்ன தாயே மாயம் செய்து
வைத்துள்ளீர்? தமிழ் மொழி
தாயின் விரல் பிடிக்கும் குழவியைப் போல் உன்
கரம் பிடித்துத் திரிவதற்கு!
எழுத்துகளின் வழியும் ஏறி நின்று
எங்களை ஏக்கம் கொள்ள வைத்து
மேடைப் பேச்சாலே கட்டியும் போட்டு விட்டீர்!
நீர் உதிர்க்கும் சொற்கள் செவியில்
சிறகுலர்த்தும் புள்ளினங்களின்
மேனி பட்ட குளிர் நீராய்!
உம் பேச்சைக் கேட்கும் போதே நாங்கள்
பித்துப் பிடித்தவர்களாகிறோம் ஆம்
தமிழ் பித்தம்மா தமிழ் பித்து!
நீர்
கம்பன் கழகத்தில் பேசிய உரையின் வீச்சில்
கம்பன் கண்கலங்கிப் போனான் எனக்
காற்றின் வழி வந்ததோர் குறுஞ் செய்தி!
பெண்மை போற்றும் தாரிகையே
பாருலகம் போற்றும் மொழித் தூரிகையே!
பிறந்தவூரின் பெருமை போற்ற
மீர்சாகிப் பேட்டை கண்ட பூவாய்
உன்னால் உச்சி குளிர்ந்து போய் நிற்கிறது
உன்னைப் பெற்ற அன்னை பூமி!
தமிழியல் ஆய்வு செய்யும் தமிழச்சியே
உன்னால் தமிழ் மொழிக்கும் பெரும் எழுச்சியே!
விக்கித்து நிற்கின்றனவாம்
விருதுகள் எல்லாம் வரிசையில்
உன் கை தழுவும் நாளுக்காய்!
இளம் இரத்தம் ஊறும் இளைஞர்கள் கூட
நீர் பேசும் போது எழுச்சி கொண்டு
விரைகிறார்கள் இலக்கை நோக்கி!
உரை எனும் நாணேற்றி
நீ அனுப்பும் சொல் விற்கள்
இலக்கை நோக்கி ஏவப்பட்ட
வேலையைச் செய்தல்லவா முடிக்கின்றன!
ஆம்! எம் நெஞ்சில் நம்பிக்கைத் தீயை
எரியவிட்டல்லவா செல்கின்றன!
தமிழ் மொழிக்கும் குறைவில்லை
தாரகை உன் பெருமைக்கும் பஞ்சமில்லை
நாம் கடக்கும் இந்தக் காலத்தைக் கருத்தில் கொண்டு
கணக்காய் என் வரவேற்புரையை முடிக்கிறேன்!
தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை
உம் தமிழ்ச் சேவை போற்றப்படும்!
நமது அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டு குழுவினர் நடத்திய "தமிழே அமுதே" நிகழ்ச்சியின் வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட திருமதி பர்வீன் சுல்தானாவின் உரை மனதிற்குள் ஊடுருவி மகிழ்ச்சியையும், ஆவலையும் கொடுத்ததோடு அவர் உருக்கமாக பேசும்போது கண்ணீரையும் வரவழைத்தது. இடியென ஓங்கி ஒலித்த அம்மையாரின் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த திறமை எனும் சிங்கம் சற்று எட்டி பார்த்தது என்று சொன்னால் மிகையாகாது.
கேட்பவரைக் கட்டிப் போட்டுவிடும் ஆற்றல் கொண்ட நனிசிறந்த பேச்சு அது.
வாசிப்பின் தேவையைக் கூறியதோடு எதை எப்படி வாசிக்க வேண்டும் என்று கூறிய பங்கு சாலச் சிறப்பு.வறுமையிலும் கல்வியே ஒருவனை உயர்த்தும் எனபதை உலகிற்குணர்த்துமாறு வாழ்ந்து காட்டும் திருமதி பர்வின் சுல்தானா மென்மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்தும் சிறியவள்!
அன்புடன்,
த.ச.பிரதீபா பிரேம்.