8/22/19

ice bell

ஐஸ்  பெல் !
                           விடுமுறை முழுவதும் இந்தமுறை தாத்தா வீடுதான்.கொல்லைபுறத்தில் கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருந்தேன் ,தூரத்தில் ஐஸ் பெல் அடிக்கும் ஓசை அப்படியே  போட்டுவிட்டு
வீட்டைச்சுற்றி நான் ஓடி வருவதற்கும் ஐஸ் வண்டி தாத்தா வீட்டு வாசலுக்கு  வருவதற்கும் சரியாக இருந்தது ,ஐஸ் நில்லுங்க.... என்று சொல்லிவிட்டு  ஒரே தாவலாக வீட்டுக்குள் ஓடினேன் காசு எடுக்க ,தாத்தா கட்டிலில்  படுத்திருந்தார்,
காசு கேட்டால் சில்லறை இல்லையடி என்பார் ,மெதுவாக ஆணியில் மாட்டியிருந்த சட்டைப்பையில் கையை விட்டேன்இரண்டு இரண்டு ரூபாய் நாணயம் கையில் சிரித்தது.2 க்ரேப் ஐஸ் ,2 மில்க் ஐஸ் என நான்கையும் கையில் பிடிக்க முடியாமல் பிடித்து வந்து டம்ளரில் போட்டுக் கொண்டேன்.நான் மனதிற்குள் வேண்டியபடியே மாமா ,சித்தி அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்... தாத்தாவைத் தவிர .டிவி பார்க்க வேண்டும் யோசித்துக்கொண்டே மெதுவாக நாடு அறைக்குச் சென்று கட்டிலுக்கு பின்னால் அமர்ந்துக் கொண்டேன்.என்னடி கைல ?என்றார் தாத்தா ,ஒண்ணுமில்ல  ஐஸ் என்றேன் மெதுவாக,எத்தனை ?என்றார் ,ஏற்கனவே 2 சாப்பிட்டு  விட்ட  மகிழ்ச்சியில் 4 என்றேன்,மேலும் நல்லா இல்ல தாத்தா ....எனச்  சேர்த்துக் கொண்டேன் .பரவாயில்ல ஒண்ணு   கொடு என்றார் அதட்டலாக ,மனதிற்குள் திட்டியபடியே வேகமாக பால் ஐஸை பாதி சப்பிவிட்டு நீட்டினேன் ,ஏது காசு ?என்றார் உங்கள தூக்கத்தில  தொல்ல பண்ண வேணான்னு நானே எடுத்துக்கிட்டேன்  என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக அடுப்படிக்கு(சமையலறை) ஓடி சாப்பாடு ஆச்சா ?என்றேன் அம்மாச்சியிடம்....  சனிக்கிழமை  வாய்ல போட்றாத விரதம் என்று கத்தினாள் அம்மாச்சி .மீண்டும் பெல் சத்தம் இந்தமுறை வேறுமாதிரி  ஒலித்தது ,திடுக்கிட்டு கண்விழித்தேன் காரில், மடியில் நழுவிய பாப்பாவை தூக்கி கையில் அணைத்துக்கொண்டேன் ,இரவு முழுதும் குழந்தையோடு கண்விழித்தது ,காலையிலிருந்து அழுதது என அசதியில் தூங்கிப்போனேன் என எண்ணிக் கொண்டேன் .தெருக்குள் வந்து விட்டோம் 10 நிமிடமா  கார் நகரல எல்லாம் நம்ம வீட்டுக்குத்தான் போறாங்க போல என்றார் வீட்டுக்காரர் ,இறுதியாக வீட்டு  வாசலுக்கு வந்தாயிற்று பாப்பாவை  அவர் கையில் கொடுத்துவிட்டு ஓடினேன் நாடு அறைக்கு,,, தாத்தா படுத்திருந்தார் இந்தமுறை  ஐஸ் பெட்டியில் ,என்னைப்  பார்த்ததும் அம்மு வந்திருக்கா ,பேத்தி வந்துருக்கா... என ஒரே அழுகை ஓலம் ,ஆனால் எனக்கு மட்டும் கேட்டது  தூரத்தில் ஒலிக்கும்  ஐஸ் பெல் சத்தம் தாத்தாவை  பார்த்தேன் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார் ஐஸில் ,ஆணியில் மாட்டியிருந்த தாத்தாவின் சட்டையும் என்னையே ஏக்கமாக பார்ப்பது போல்
இருந்தது எனக்கு !



No comments:

Post a Comment