8/22/19

புத்தகமேந்தவேண்டிய கைகள் !


                                                  புத்தகமேந்தவேண்டிய கைகள் !


மிதந்து கொண்டிருக்கும் மேகக் கூட்டங்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஹன்சினியிடம்  என்னடா என்ன யோசிக்கிற என்று கேட்டதும் சற்றே என் பக்கம் பார்வையை திருப்பி ஒண்ணுமில்லம்மா நம்ம ஊர் எப்படி  இருக்கும் ? எல்லாரும் எப்படி இருப்பாங்க ? என்னோட ஸ்கூட்டர் எல்லாம் நான் ரொம்ப மிஸ் செய்வேன்ல  ? அங்க கார் இருக்குமா ? அவள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுவதற்கு முன்பே அத்தனை  கேள்விகளும் வந்து விழுந்தது ,இங்க  எப்படி இருக்கோ... அதே போலதண்டா அங்கேயும் ,சரி சீட்   பெல்ட்ட  போட சிம்பல் வருது பாரு என சொல்லிவிட்டு அவள் கையில் பசுல்ஸ் அண்ட் மேசஸ் புக்கை கொடுத்துவிட்டு நானும் மிதக்கும் வான்மெத்தையின்  மேல் கண்ணை பதித்தேன் ,கடைசியாக கைகுழந்தையாக  ஹன்சினி இருக்கும் பொழுது இந்தியா வந்தது 4 வருடங்கள் உருண்டோடிற்று நம் நாடு ,நம் வீடு , என்று நினைக்கும் போதே புல்லரிக்கிறது என நினைத்துக்கொண்டே எனக்கு அருகில் வந்த பணிப் பெண்ணையும் கவனிக்க  தவறவில்லை நான் ,1 நான் வெஜ் மீல்சும் 1 வெஜ்  மீல்சும் சொல்லி வாங்கிக்கொண்டேன் ,இருந்த பசியில் உள்ளே போயிற்று வேகமாக   , இங்கே செவிக்கு உணவிடுவதற்கு முன்பே வயிற்றுக்கு  ஈயப்பட்டாயிற்று  என எண்ணிக்கொண்டே  பாரதியின் கவிதைகள் புத்தகத்தை  கையிலெடுத்தேன் , நீங்க தமிழா? என ஒரு குரல் கேட்டது நிமிர்ந்து பார்த்தால் 65 வயது இருக்கும் அந்த அம்மா கண்களில் நான் என்ன சொல்ல போகிறேன் என்ற ஆர்வம் மிகுந்தது ...ஆமாம்மா என்றேன் ,நீங்க பிரான்க்பார்ட் வழியா சென்னை போறிங்களா?  என்றார் அடுத்ததாக ஆமாம்மா என்றேன் ,அப்படி ஒரு பிரகாசம் அவர் விழிகளில் நாங்களும் தான்மா... சென்னை போற வரைக்கும் கொஞ்சம் உதவி பண்ணுங்க என்றவரிடம் கண்டிப்பா நானே கூட்டி போய் விடறேன் வெளில வரைக்கும் கவலைபடாதீங்க என்றேன்.சரிம்மா நான் போய் இனி நிம்மதியா தூங்குவேன் என்றார்.அவரை பார்க்கும் போதே மனது வலித்தது நம் அம்மாவும் இப்படி தானே ஒன்றுமே தெரியாமல் நம் பிரசவத்திற்கு வந்திருப்பாள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள் மொழி புரியாமல், வழி புரியாமல், நினைக்கையிலே கண்கள் ததும்பியது.என்ன செய்தாலும் பெற்றவருக்கு நாம் ஈடே செய்யமுடியாது கடைசி காலமாவது அவர்களிடம் போய் விட வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்.ஒரு வழியாக நாங்கள் சென்னை  ஏர்போர்ட்டிற்கு  வெளியில்  வந்தோம்... ஆம் அந்த அம்மாவுடன் தான்  , வீடு செல்லும் வழியெல்லாம் மாறிப் போய்  இருந்தது ,அடுத்த நாளே ஊரில் நடக்கும் நிகழ்ச்சிக்காக உடைகள் வாங்க செல்லும் வரை இந்தக் கதைக்கான கரு கிடைக்கவில்லை ,கடைக்கு வெளியே என் மகள் வயதே ஆன குழந்தை அக்கா ...... இத வாங்கிக்கங்க அக்கா 1 ஸ்டிக்கர் அட்டை வாங்கிக்கங்க..... இன்னும் சாப்பிடவே இல்லை என்று சொல்ல சொல்ல எனக்கு இந்த சமுதாயத்தையும் இந்த பிஞ்சுக் குழந்தையை பெற்றவரையும் நினைத்து  ஆத்திரமாக வந்தது, அம்மா.... பாவம் அந்த பாப்பா,  நீங்க ரியல்லி  பேட் ஒண்ணுமே ஹெல்ப் பண்ல அவளுக்கு, அவ ஏன் சாப்பிடல ,ஏன் இந்த டிரஸ் போட்ருக்கா ? அவங்க அம்மா எங்க ?ஹன்சினி  கேட்கும்போதே அழ ஆரம்பித்து விட்டாள் ,எனக்கு என்ன  சமாதனம்  சொல்வதென்றே  தெரியவில்லை,இந்த சமுதாயம் இப்படியே ஊறிப்போய் கிடக்கிறது இதனை மாற்ற என்ன செய்யலாம் ?இந்த வகையான பெற்றோரை எப்படி மாற்றலாம் ?இப்படி நினைத்துக் கொண்டே காரில் ஏறிக்  கொண்டேன் . அந்தக் குழந்தையிடம் வாங்கிய போனி ஸ்டிக்கரை  ஆசையாக கட்டிக்கொண்டு வந்தாள்  இவள்  ,எப்படியொரு உலகம் இது ,இதே போல் அம்மா அப்பாவுடன் விளையாட வேண்டிய குழந்தை அது   இப்படி தெருவில் விட்டார்களே !!அரசியல்,மனிதம்,கல்வி எதுவுமே இவைகளை மாற்றாதா?
இப்படி எண்ணிக் கொண்டே வீடு வந்தேன் ,மறு நாள் குழந்தையோடு வெளியே வரவே பயம்தான் ஏனெனில் அவள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை ,ஆனால் அவள் விடுவதாக இல்லை ,அபர்ட்மெண்டை  விட்டு வெளியிலே வந்ததும் இரண்டு சிறுவர்கள் ஓடி வந்தார்கள் அக்கா ,அக்கா  பாப்பாக்கு புக் வாங்கிக்கங்க 2 புக் 20ரூபாதான் என்றான்  ஒருவன், சரி கொடு என்று 20 ரூபாயை கொடுத்து திரும்புவதற்குள் அக்கா ,அக்கா  நான் 10 ரூபாய்க்கு தரேன் வங்கிக்க.... என்றான் இன்னொருவன்  ,எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நான் புத்தகம் வாங்கியவனை கூப்பிட்டு தம்பி பொய் சொல்லாம சொல்லு புத்தகம் என்ன விலை ?என்றேன்... அக்கா இல்லக்கா....நான் சாப்பிடவே இல்லக்கா ,ஒரு புக்கும் விக்கலைக்கா அதான் என்று தலையை சொறிந்தவனை  திட்டுவதற்கோ ,கோபப்படுவதற்கோ  மனம் வராமல் போய்  சாப்பிடு  முதல்ல என்றேன் ,தேங்க்ஸ் க்கா என்றவாறே ஒரு அழகிய சிரிப்பை உதிர்த்து விட்டு சென்றான்.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பாப்பா ..அம்மா ஏன்மா அந்த அண்ணா பொய் சொன்னான்?, ஏன் இவங்களுக்கெல்லாம் சாப்பாடு இல்லை  ?என்றாள் வறுமை,சுயநலம் கொண்ட சமுதாயம் நாம இவங்களுக்கு எதாவது பண்ணனும் பாப்பா என்று கூறிவிட்டு நகர்ந்தேன்  .இதோ ஒரு வருடம் கடந்தே போயிற்று தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளின் தாயகத்தை  விட்டு கடல் கடந்து வந்தாயிற்று சொல்லப் போனால் நானும்  அந்த சுயநல சமுதாயத்தில் ஒரு அங்கம் தான் என மனது இடித்துரைக்கிறது , அப்போதெல்லாம் கடவுள் முன் நின்று எனக்கும் ஒரு சக்தியை கொடு அவர்களை வெளிச்சத்திற்கு  கொண்டு வர என வேண்டிக் கொண்டு இருக்க மட்டுமே முடிகிறது  , விரைவில் அந்த பிஞ்சுக்  கரங்கள் பாடப்புத்தகத்தை  தாம் படிப்பதற்கு மட்டுமே ஏந்த ....அரசும் ,பெற்றோரும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என்னுடன் நீங்களும் !!

No comments:

Post a Comment