8/22/19

                                                           பல்லைக்  காணோம்!

உலகத்திலேயே எனக்கு இப்போ பெரிய பயம் பேயோ,பிசாசோ ,என் வீட்டுக்காரோ இல்லை ,சில பொண்ணுங்க சொல்றது  போல கரப்பான் பூச்சி ,பல்லி ......ரொம்ப யோசிக்காதீங்க செய்திய  கேட்டா அடிக்க வந்தாலும் வருவீங்க !  என்னோட ஒரே  பயம் பல் வைத்தியர்  தான் ! என் பொண்ணு ஒவ்வொரு முறை பல் வைத்தியரிடம் போகும் போதும் ஒரே பயம் தான்.. அட அவளுக்கு இல்லங்க  எனக்குதான் !!
அவ அருகிலேயே நின்னு பார்ப்பேன் மருத்துவர் ஊசிய எடுத்தாரோ ! அந்த நிமிடம் நான் நின்ற இடத்தை காற்று தான் நிரப்பி கொண்டு இருக்கும் !இதோட ஐந்து, ஆறு முறை மருத்துவர் கிட்ட  போயாச்சு ,அவ புண்ணியத்துல கணவர் பல்லும் சரி பார்க்க பட்டாச்சு ,அடுத்து என் மகன் ஐயோ வேண்டாங்க அவன் பல் என்ன மாதிரியே, எதுவும் பிரச்சனை இல்லைனு சொன்ன அடுத்த நிமிஷம் அம்மா எனக்கும் வேணும்னு  மருத்துவர்  முன்னாடியே ஒரே போடா போட்டுட்டு குடு குடு குடுன்னு ஓடி போய் நாற்காலியில் அமர்ந்தது என்ன பார்த்து சிரிச்சான் !!
அட பாவி லாலிபாப் தரலடா அவங்க என மனசு சொல்ல ,மருத்துவர் "இவன் உங்கள போல இல்லங்க அப்பா போல திடமா இருக்கான் "என்றதும் ,மனதிற்குள்  கருவிக் கொண்டு ஆமாம் என்றேன் ! வேற வழி !!

இவ்வளவையும் ஏழு கடல் ஏழு மலை கடந்தது போல கடந்து வந்த எனக்கு வந்தது பெரிய சோதனை !!
வாயில எத வச்சாலும் எரிச்சல் ,இப்போவது கொஞ்சம் பேசறது  குறையும்னு வீட்டுக்காரர் மகிழ்ச்சியா இருந்தாலும் என் தொல்லை  தாங்காம மருத்துவரிடம் போயாச்சு! வழக்கம் போல அவர் என்ன ஆச்சுன்னு எல்லா கதையும் கேட்டுட்டு மருந்து எழுதுறப்பவே ,ஒரு வேளை அதா இருக்குமோ? டாக்டர் ,இல்ல இதா இருக்குமோ? என நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்,அவர் மெதுவா நிமிர்ந்து  பார்த்து எதுனாலன்னு சரியா தெரியலைம்மா!  ஏதா இருந்தாலும் இந்த மருந்தை 5 நாளைக்கு குடிங்க அப்புறம்... என்று அவர் சொன்ன வார்த்தையை கேட்ட எனக்கு மயக்கமே வந்திரும்  போல இருந்தது...ஆமாங்க, நீங்க நினைக்கிறது சரி தான் ...எதுக்கும் போய் பல் மருத்துவரை பாருங்க என்றாரே ,எனக்கு இடி மின்னல் மழை எல்லாம் ஒரே நேரத்தில் மனசுக்குள்ள வந்துருச்சு ,நம்ம வீட்டுல எல்லாருக்கும் நம்ம விஷயம் தெரிஞ்சு நண்டு ,சிண்டு எல்லாம் நம்மள பார்த்து சிரிக்குது என்ன செய்யறது ?,அடுத்த நாள் மருத்துவரை பார்க்க கிளம்பியாச்சு !!

ஊருக்கு திருவிழா பார்க்க போறது மாதிரி குடும்பமே போய்  இறங்கியாச்சு ,பரிட்சையில் படிக்காத பேப்பர் வந்தா ஒரு பயம் வருமே அத விட இது அதிகமா  தெரிஞ்சது,காத்திருக்கயிலேயே பல்லுல ஊசி போட்ட வழிக்குமாடா ?னு கேட்டா என் பொண்ணு அப்புறம்? எனக்கு போடும்போதெல்லாம் பார்த்திருந்தாத்தானே ,என அலுத்து கொண்டாள் !பின்  ரொம்ப வலிக்கும்மா என  சொல்ல ,என் முக மாறுதலை பார்க்க கணவருக்கே சகிக்கலை போல,அட சும்மா காட்ட தான் வந்திருக்கோம் ஊசி எல்லாம் இல்லை சும்மா இரு என்றார் !
என்ன இருந்தாலும் வீட்டுக்காரர் வீட்டுக்காரர் தானே,இந்த பிள்ளைங்க கிடக்கு என அவளை அலட்சியமாய் பார்க்க அவ தொலைபேசிக்குள்ளே தலையை விட்டு வெகு  நேரம் ஆச்சு போல!

கடைசியா மருத்துவர் என் முறை வந்தவுடனே சிரிச்ச சிரிப்பிலேயே, நல்லா  மாட்டிக்கிட்ட போல
என சொல்வது தெரிந்தது ...மருத்துவ உதவியாளர் உயரமான இருக்கையில் உட்கார வைத்து ஒரு சாய் சாய்த்து விட்டார் ,நமக்கு நம்ம ஊர் ராட்டினத்தில் ஊட்காருவதே பேய் பயம்,இதுவும் அதை போல தான் இருந்தது,வாயை நன்றாக திறக்க சொல்லி துணிக்கு போடும் கிளிப் மாதிரி வாய்க்குள்ள வச்சு கடிக்க சொல்லவும் ,ஏற்கனவே வாயெல்லாம் வலி இதில இது வேற என எண்ணிய எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது ,மிகவும் சிரமப்பட்டு எல்லா படமும் எடுத்தாயிற்று ,அடுத்த 5 நிமிடம் மாறி ,மாறி மருத்துவரும் உதவியாளரும் பேசிக்கொள்கிறார்கள் ,எனக்கு ஒரே குழப்பம் பல்லை தானே எக்ஸ்ரே எடுத்தாங்க இதில என்னப்பா ?என்று ,மருத்துவர் கேட்டார் உங்களுக்கு 31 பால்தான் இருக்கு விஸ்டம் டூத் எடுத்தீங்களா இதுக்கு முன்னாடி என்று ? இல்லங்க பிறந்ததிலிருந்து இதுதான் முதல் முறை பல் மருத்துவரிடம் நான் வருவது என்றேன்...நல்ல யோசிச்சு பாருங்க சிறு வயதில் எதாவது எடுத்தாங்களா?இல்ல டாக்டர் என்றேன்…

திரும்பவும் அவர்கள் இருவரும் கூடி பேசிக்கொண்டார்கள் ...ஆச்சர்யமா இருக்கே மீதி 3 அறிவு  பல்லும் உள்ள இருக்கு இனி அவை வளரும் ஆனா ? இந்த பல்லை மட்டும் காணோம் என்றார் ….
சும்மாவே நம்ம வீட்ல எல்லாரும் நம்ம அறிவை மெச்சுவாங்க  !! இதுல ஒரு விஸ்டம் டூத் இல்லனதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியலை ...அதோடு மருத்துவர் நான் இதுவரை 31 பல்லோடு ஒருத்தரை பார்த்ததில்லை ,...அதுவும் விஸ்டம் டூத் இல்லாமல் என்றார் !!! இதைக் குறிப்பதற்கு எங்கள் அட்டவணையில் ஒரு இடமே இல்லை எனவும் சொன்னார் !!! கடைசியில முப்பது வயசுக்கு மேலதான் ஒரு பல்லு  இல்லனு தெரிஞ்சுருக்கு என எண்ணும்போது  வரும் சிரிப்பை அடக்கி கொள்ள வேண்டியதாக இருந்தது ...எல்லாம் முடிஞ்சு ஒரு பல்லை காணோம்னு கண்டுபிடிச்சதுக்கு இவ்ளோ பெரிய தொகையா ?என எண்ணிக்கொண்டே கொடுத்து விட்டுவெளியே வந்து அடக்கி  வைத்த சிரிப்பெல்லாம் சிரித்தாயிற்று ….  இதுதாங்க இந்த பல்லை காணோம் கதை…





No comments:

Post a Comment