பிள்ளை முகம்
வழக்கம் போல வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கெல்லாம்
அலுவலகத்திலிருந்து புறப்பட்டு அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து
எனது தங்கும்விடுதிக்கு ஓடினேன் ,ஆயத்தமாக வைத்திருந்த எனது பெட்டியை தூக்கிக் கொண்டு குறுக்கு வழியைப் பிடித்து ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கும் எனது புகை வண்டி கிளம்ப போகும் செய்தி ஒலிபெருக்கியில் வருவதற்கும் சரியாக இருந்தது,ஓடிச் சென்று மகளிர்க்கான பெட்டியைப் பார்த்தேன் நிற்க கூட இடமில்லை ,வேறு வழியில்லாமல் பொது பெட்டியில் ஏறும்போதே வண்டி நகர தொடங்கிற்று,இறுதி நேரத்தில் அடித்து பிடித்து ஏறும் என்னை பெட்டியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்து விட்டு அவரவர் வேலையில்
ஆழ்ந்து விட்டனர்.எவ்வளவு நேரம்தான் நிற்பது எங்காவது சிறிது இடம் கிடைக்குமா? என கண்கள் அலைந்துக்கொண்டிருக்கையில் எனக்கு எதிரே உள்ள வரிசையில் ஒரு அம்மா தனது குழந்தைகளை உட்கார வைத்திருந்தார்,சிறிது நகர்ந்தால் நானும் அமரலாம் என நான் எண்ணுவதை பார்வையிலேயே உணர்ந்த புண்ணியவதி பிள்ளைகளை இன்னும் நகர்த்தி உட்கார வைத்து முழு இடத்தையும் அடைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் ....இன்னும் 5 மணி நேரப் பயணமாதலால் நிற்பது சரிபட்டு வராது என எண்ணிக் கொண்டே என் பையை கீழே வைத்து அதில் மெத்தென்று அமர்ந்து கொண்டு தனி சிம்மாசனத்தில் அமர்ந்த பெருமிதத்தோடு அனைவரையும் நோக்கி பார்வையை செலுத்தினேன்,பிள்ளையை நகர்த்த மறுத்த தாய் எனது சிம்மாசனத்தை பார்த்து பொறாமையில் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டார்.
வண்டி சென்னை எக்மோரிலிருந்து ,மதுரை போய்க் கொண்டிருந்தது.
தாம்பரம் வரை நான் என் கையில் இருந்த பாரதியார் கவிதையில் ஆழ்ந்து விட்டேன் ,தாம்பரம் வந்ததும் சிம்மாசனத்தை விட்டு கட்டாயம் எழ வேண்டும் ,இல்லெயெனில் வழியில் நந்தி போல் அமர்ந்ததற்கு தேநீர் விற்பவரிடமெல்லாம் அர்ச்சனை வாங்கியாக வேண்டும்.ஒரு வழியாக தாம்பரம் தாண்டியது நான் மீண்டும் என் ஆசனத்தை அமர்வதற்கு சரி பண்ணிக் கொண்டிருந்தேன் ,மானசீகமாக நான் வாழ்த்திய அந்த தாய் என்னை அழைத்தாள் இங்க வந்து உட்காந்துகங்க என மெல்லிய புன்னகையுடன்.... புரியாத புதிராய் நன்றி என ஆங்கிலத்தில்(தேங்க்ஸ்) உரைத்துவிட்டு அமர்ந்துக் கொண்டேன்,அவர் மடியில் அமர்ந்திருந்த 2 வயதுக் குழந்தை கையால் என்னை தடவியது,பூக்கள் கூட தோற்றுத்தான் போகும் குழந்தையின் மெல்லிய வருடல் முன் என
கவித்துவமாக மனதுக்குள் எண்ணிக் கொண்டேன்,சற்றே என் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவொருவராக பேசத் தொடங்கினர்,எல்லோர் அறிமுகப் படலமும் முடிந்தது ஒரே கேள்விக் கணையுடன் எல்லோரும் என்னை பார்பதாகத் தோன்றியது எனக்கு ,நான் தஞ்சாவூர் அரியலூர்ல இறங்கனும் என்றேன் .பிறகு வந்த அணைத்து கணைகளுக்கும் பதில் கொடுக்க வேண்டியதாய் போனது வேறு கதை .எனக்கு எதிரே மதுரை என்று சொன்ன மனிதர் ராணுவ உடை அணிந்திருந்தார் ,எனக்கு ஒரே ஆர்வம் யாரவது அவரை கேள்வி கேட்க மாட்டார்களா? என,இறுதியாக
ஒரு வயதானவர் கேட்டார் ஏம்பா
மிலிட்டரியா ?இப்ப என்ன லீவா? என்றார். ஆமாம் என்றார் அந்த மனிதர்.மேலும் 5 வருடத்திற்கு பிறகு போகிறேன் என்றார் அவர் ,தனது சட்டை பையிலிருந்து ஒரு குழந்தையின் புகைப்படத்தை காட்டினார் என் பெண் என்றார்.அழகா இருக்கு இப்போ பிறந்திருக்கா என்றேன் நான் .,சிரித்துக் கொண்டே சொன்னார் எனக்கும் அப்படிதான் இருக்கு இப்போ பிறந்தது போல் என சொல்ல ..அனைவரும் அவரையே பார்த்தோம் , ஆமாம் பிறந்த அன்னைக்கு பார்த்தேன் இபோ 5 வயசு, மனமெல்லாம் அவள் நினைவுதான் என்றார் அலுங்காமல்.ஒரு நிமிடம் அனைவரும் அவரை பாசத்தோடு பார்த்தோம் .5 வருஷம் பொறுத்துட்டீங்க இன்னும் 5 மணி நேரம்தான் என்றேன் நான்,சிரித்துக் கொண்டார்.வாரம், வாரம் தொலை பேசியில் அப்பா அப்பா என மூச்சுக்கு முந்நூறு தடவை பேசுவாள் ,அவளை பார்ப்பதை நினைக்கவே அப்படி இருக்கிறது எனக் கூறி மனிதர் எங்களையும் சிலிர்க்க வைத்தார்.எல்லாம் பேசி முடிப்பதற்குள் எனக்கு அரியலூர் வந்து விட்டது.எல்லோருக்கும் விடை சொல்லிவிட்டு புறப்படஆயத்தப்பட்டேன்... என் அருகில் அமர்ந்திருந்த தாய் சொன்னார் எனக்கும் பாரதியார் கவிதைனா ரொம்ப பிடிக்கும் என ,நான் மனதுக்குள் பாரதிக்கு நன்றி கூறிக்கொண்டேன் அவர் புண்ணியத்தில் இடம் கிடைத்ததற்கு .
பின் அந்த பிள்ளையை பார்த்த அப்பா எப்படி மகிழ்வார் என எண்ணிக் கொண்டே தஞ்சாவூர் பேருந்தை பிடித்தேன் . இந்த முறை அம்மா ,அப்பாவிடம் கூறாமல் செல்லும் ரகசியப் பயணமாதலால் அவர்களைக் காண ஒவ்வொரு நொடியும் யுகமாக கழிந்தது .ஒருவழியாக வீட்டுக்கு வருகையில் மணி இரவு 9 .30 ஆகி இருந்தது ,மெதுவாக வாசற்கதவை திறந்துக் கொண்டு ,அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஒளிந்துக் கொண்டேன் .அப்பத்தான் வந்தார் சட்டென்று எதிரே வந்து நின்ற என்னைக் கண்டதும் என்னடா குட்டி? சொல்லாம கொள்ளாம,எப்படி டா தனியா வந்த பஸ்லேர்ந்து இறங்கி? என்று சொல்லிக் கொண்டே
அணைத்துக் கொண்டார், வார்த்தை எழாமல் .மாதம் 2 முறை பார்க்கும் அப்பாவின் பூரிப்பே இப்படி என்றால் அந்தக் குழந்தையின் தகப்பனின் நிலையை எண்ணிக் கொண்டு ,அப்பாவைக் கொஞ்சி கொண்டே, வீட்டினுள் இருக்கும் அம்மாவைத் தேடிப் போனேன் .இது போல் எத்தனை அப்பக்களோ எல்லையில் நமக்காக சொந்த பந்தத்தை எல்லாம் விட்டு விட்டு என மனதுக்குள் எண்ணம் அலையாய் எழுந்து ஓய்ந்தது .
No comments:
Post a Comment