8/22/19

                                               கன்னுக்குட்டி - பிரதீபா பிரேம் .

ஆரவாரமில்லாத ஐப்பசி மழை ! நிற்காமல் தூவி கொண்டுதான் இருந்தது நான்கு நாட்களாக! மழைச்  சாரலில் , போர்த்திய கம்பளிக்குள் கலை மடக்கிக்  கொண்டு தூங்கும் தூக்கம் அடடா!!அம்முக்குட்டி கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்! தூறலின் இடையிலும் தனது கரத்தை நீட்டும் கதிரவனை அதட்டி விட்டு !!!

இரண்டு  நாளா இந்த மாடு படர பாடு தாங்க முடியல இன்னிக்கும் வேலைய கட்டிகிட்டு அழாம கொஞ்சம் மாட்டு டாக்டர வர சொல்லிட்டு போங்க ,அவரு பொண்டாட்டிய நேத்து பாத்தேன் வீட்டுல  மாடு ரொம்ப சொணங்கி இருக்கு அவர வந்துட்டு போக  சொல்லுங்கனேன் ,சொன்னாளோ? இல்லையோ? மகராசி ! அம்மா தாமரையின் சத்தம் இது !!!!         

காலையில காபிய கொடு நை ..நை ..நைன்னு  ஆரம்பிக்காத என்று திரு  சற்று குரலை உயர்த்த !

காபி மட்டும் எங்கிட்டு வரும் ? வேல ஒன்னு சொன்னா  கேக்கிறது  இல்ல !!!,தாமரை  சற்று கவலை தோய்ந்த தொனியில் தான் கூறினாள் .

ஆரம்பிக்காத கட்டாயம் இன்னிக்கு வர சொல்றேன் போதுமா ? என்று பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார் திரு .

 தூக்க கலக்கத்தை  அம்மா, அப்பாக்கு கொடுத்த அர்ச்சனையிலே கலைத்தாள் அம்மு !போர்வையை உதறிவிட்டு ஓடினாள் கொட்டகைக்கு.. வெளியில் தூறல் நின்ற பாடில்லை ,மழைச்  சாரல் படாமல் இருக்க அம்மா சாக்கு கட்டி கொண்டிருந்தாள் கொட்டகையில், நிறைமதமாய் நிற்கும் மாடு,இனம் புரியாத வலியில் பாவமாய்  பார்த்தது!!

முகத்தின் அருகே  சென்று தடவிக் கொடுத்தேன் , மாடு வலியில் விட்ட பெரு மூச்சால் என் கை கதகதத்தது,இங்க என்ன அம்மு பண்ற ? ஸ்கூலுக்கு கிளம்பனும் போயி பல்ல விலக்கு,

அம்மா எப்பம்மா கன்னுக்குட்டி பிறக்கும்?

இன்னைக்கு. இல்லைனா நாளைக்கு பிறந்துரும்,

கன்னுக்குட்டி நல்லா ரோஸ் கலர்ல இருக்கனும்  அப்படித்தான்  கனவெல்லாம் கண்டேன் சரியா ? சொல்லி கொண்டே பள்ளிக்கு கிளம்பினேன்.
 ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு சீக்கிரம் சாப்பாடு கொடுங்க இல்லனா... வேண்டாம் அம்மு கத்தி கொண்டே கொட்டகை பக்கம் பார்வையை வீசினாள் ,

வலி மிகுந்த பார்வையுடன் பாசமாய் பார்த்தது மாடு அவளை ,பதிலுக்கு அவளும் சிரித்து  வைத்தாள் , அதற்கு புரியும் என்பது தெரிந்து ...

பறக்காத, இட்லி எடுத்திருக்கேன் , கொஞ்சம் ஆறட்டும்  அம்மா சொல்லி கொண்டே ஊட்ட  வந்தாள்...

வெளியில் சைக்கில் சத்தம் அப்பாவும், டாக்டரும்...... அம்மா தட்டை வைத்துவிட்டு வாங்க ,வாங்க என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு  போய்விட்டாள்,இட்லியை  விழுங்கி தண்ணியை குடித்தாள் அம்மு ,டாக்டர் மாட்டின் வயிறை அமுக்கி பார்த்து கொண்டிருப்பது நாடு அறையின் சன்னல் வழியே நன்றாய் தெரிந்தது .

அம்மா டாட்டா ,அப்பா டாட்டா சொல்லிவிட்டு தோல்பையை மாட்டிக்கொண்டாள் ...

படலை மூடிட்டு போ..... ஆடு மாடு வந்துரும்  உள்ள.... ....அம்மா கத்தினாள், கொட்டகையில் இருந்து.

வழக்கம் போல வகுப்புகள் முடிந்தது, அதுவரை மறந்திருந்த கன்றுக்குட்டியின் நினைவு மீண்டும் தலை தூக்கியது தோழிகளுக்கு
விடை  கொடுத்து விட்டு விடு விடு வென நடையயைக் கட்டினாள்  ....

இரவு அதே எதிர்பார்ப்புடன் கரைந்தது!
 மிகவும் சன்னமான குரல் அருகே ஒலித்துக்  கொண்டே இருந்தது !
வயிற்றில் கன்னுகுட்டி இல்லை !!! சுற்றி பார்த்துட்டேன் தோட்டத்தை ...
எங்கேயும் காணோம் !!!ஒருவேளை நாய் கீய் .....இழுத்தது அம்மாவின் குரல் !!
படாரென்று இயந்திரம் போல் எழுந்து போர்வையையை உதறித்தள்ளி
கண்ணை கண்ணை கசக்கி கொண்டே ஓடினாள் ...கொட்டகைக்கு அம்மு  !

இருவரும் அவளை ஒரு  நிமிடம் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் தேட  துவங்கினார்கள் ....பாதி  புரிந்தவளாய் அம்மாவிடம் சென்று எங்கே போச்சு? கண்ணு குட்டி என்றாள்  ....தேடி பார்றா ...இப்போதான் நாங்களும் எழுந்தோம் ,என்றாள் அம்மா ....

நல்ல குளிர் ,இன்னும் சூரியன் கண்ணை கசக்கி கொண்டுதான் இருந்தது முழுவதும் தூக்கம் கலையாமல்  ....இருந்த அரை குறை வெளிச்சத்தில் தோட்டத்தின் அருகில் இருந்த சிறு அறையின் ஓரத்தில் சென்று எட்டி பார்த்தாள்  அம்மு ...வெள்ளையாய்  சுவர் ஓர பள்ளத்தில்  எதோ தெரிய...அப்பா விளக்க இங்க கொண்டு வாங்க எனக் காத்திக் கொண்டே ஆயிரம் சாமியை வேண்டிக் கொண்டாள் ... கட்டாயம் பிங்க் கன்னு குட்டியாதான்  இருக்கணும் !!!!

விளக்கு வெளிச்சத்தில் அது கன்று  குட்டி தான் என முடிவு செய்து ,
மெதுவாக அதற்கு அடி  படாமல் பள்ளத்திலிருந்து மீட்டார் அப்பா !!!நடக்க முடியாம தடுமாறி நடந்து இருட்டில் இங்க வந்து விழுந்துருச்சு போல எனச் சொல்லி கொண்டே கன்று  குட்டியை  மாட்டின் அருகே கொண்டு வந்து போட்டு அதன் கால்களில் உள்ள குழம்பை நீக்க முற்பட்டார் .....அம்மா மாட்டின் சினை  பையை ஒரு சாக்கில் கட்டி வைத்து விட்டு ...கொதித்து கொண்டிருந்த வெந்நீரை வெது வெதுப்பாக்கி மாட்டின் பின் புறத்தை கழுவிக் கொண்டிருந்தாள் அதற்கு வலிக்காமல் மெதுவாக ....

பிள்ளையை  பார்த்த மகிழ்ச்சியில் மாடு சுற்றி சுற்றி நடந்தது ,பிரசவித்த  வலியயை மீறி .....அதனை விட கன்று குட்டியின் இளஞ்ச்  சிவப்பு
கலந்த வெள்ளை நிறத்தைக் கண்டு கனவு நினைவானதை எண்ணி அதன் மேல் சாய்ந்து  கொண்டு கொஞ்சி கொண்டிருந்தாள் அம்மு......

அதற்குள் அம்மா கன்றை ஊட்ட விட்டு ..அது குடித்தது போக மீதி சீம்பாலை
காய்ச்சி விட்டு கூப்பிட்டாள் ...இதைக்  குடிச்சுட்டு அப்பாவோட போய் இந்த சாக்கை  ஆல  மரத்தில் கட்டிட்டு வா, என்றாள் .மனம் முழுதும் மகிழ்ச்சியோடு அப்பாவின் பின்னல் அமர்ந்து சாக்கை கையில் பிடித்துக்    கொண்டு அமர்ந்தாள் அம்மு ....  ஆற்றங்கரையின்  ஆலமரம்  நோக்கி அப்பாவின் வண்டி பயணப்பட்டது ..இளம் வாடை காற்றை கிழித்து கொண்டு....

கதையை எழுதி முடித்து விட்டு ...வலை தளத்தில்  செய்தியை படிக்க திறந்தேன் ..."தமிழகத்தில்  பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டை தடுக்கக் கோரி வலியுறுத்தல் "..தலைப்பு செய்தியை  பார்த்து சிரித்துக் கொண்டேன் ....நமது குடும்பத்தில் மாடுகளும் ஒன்று என தெரியாதவர்கள் ....நமது பாரம்பரியம் புரியாதவர்கள்  என .......


1 comment:

  1. வணக்கம் நண்பரே
    பிரதீபா பிரேம் அவர்கள் சிறுகதை கன்னுக்குட்டி அருமையான நடையில் அற்புதமான கதை.கொஞ்சம் மாற்றி கன்னுக்குட்டி போடும் என்றும் இருக்கலாம் என் நிலைப்பாடு மற்றபடி வாழ்த்துக்கள் தோழரே!!

    ReplyDelete