10/16/19

                                                    அம்மா நான் பேசுகிறேன்!(ஆட்டிசம் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்)


அம்மா நீ அழுதிடாதே !
அங்கம் வருத்தி புலம்பிடாதே !
ஆண்டவன் உனக்களித்த
அனிச்சை மலர் நான்!
வானின்று இறங்கி வந்த
வண்ண விண்மீன்  நான்!
வாடாமல் தினம் சிரிக்கும்
வாச  மலரும் நான்!
தேவதை நான் பிறந்த கணம்
பூரித்துப்  போனாய் ,
புது மலராய் எனை எடுத்து
புல்லரித்து நின்றாய் ,
தவழ்ந்து நானும் நடந்திடவே
தவாமாய் கிடந்தாய் ,
தத்தி  நானும் நடக்கையிலே
தடம் தாங்கினாய் ,

பூத்துக் குலுங்கும்
புதுமலராய் !
புல்லினில் படுத்துறங்கும்
பனித்துளியாய் !
மணல் தொட்டு ஓடி வரும்
வெண் அலையாய் !
ஆழியிலே அமிழ்ந்தெடுத்த
அழகிய முத்தாய் !
அணு அணுவாய் என்னை ரசித்து
ஆனந்தம் அடைந்தாய் !

பூமிக்கே நீ தந்த
தேவதை நான் !
சோதனைகள் பல தருவேன்
சொக்க வைக்கும் அழகியும்  நான்!
                   சிற்பமாய் வந்து நின்றேன்
                   உயிர் கொடுப்பதுன் பொறுப்பு !
                   பிறை நிலவாய் உனக்குதித்தேன்
                   முழுமையாக்கு உன் பொறுப்பு !
                 
பூக்களிடை மொட்டாய்  நானிருக்க
பூக்கும் நாள் தூரமில்லை
புன்னகை செய்திடு  !
வானிலிருக்கும்  இவ்விண்மீன்
ஒளிரும் நாள் தொலைவில் இல்லை
விழிகள் பூத்திரு !
                                            அம்மா..... அமுதூட்டு !
                                            அம்மா .....அள்ளியெடு !
                                            அம்மா ......அணைத்துக் கொள் !
                                            கன்னத்தில் முத்தமிடு !
                                            கனிவாய் பல கதை சொல்லு !
                                            இன்னும் பல வார்த்தையெல்லாம்
                                            சொல்லும் நாள் தூரமில்லை !
ஏங்கி நிற்கும் என் அம்மா
ஏக்கம் தீர்ப்பான் இறைவன் அவன்!
அந்த நாளும் விரைவில் வரும்-அது வரை
 அம்மா நீ அழுதிடாதே !!!!




                 


No comments:

Post a Comment