3/1/19

இது ஒரு குட்டி கதை 9 வருடங்களுக்கு முன்பு எழுதியது !! காலம் தன் காலில் சக்கரத்தைக் கட்டிக்  கொண்டு தான் ஓடுகின்றது....
                     
                 ஹலோ அம்மா !

அசந்துப்  போய் அமர்ந்தேன்
அத்தானின் அலுவலக ஆயத்தம் முடித்து
தொலைபேசி எடுபதற்குள் 
மெல்லியதோர் சிணுங்கல்
இன்றைய காலை முடிந்தது  என
எட்டி பார்த்தேன்!
இல்லை அம்மா இளைப்பாறிக் கொள் - என
தலையனையை அணைத்தாள் குழந்தை
எண்களைத் தட்டினேன்!
ஹல்லோ ....
அம்மா நான்தான்
மீண்டும் ஹல்லோ.....
நான்தான்
சரியா கேட்கலடி அமெரிக்காலேர்ந்து ....
அடக்க முடியா சிரிப்பு எனக்கு 
கேட்குதா?
விட்டு விட்டு...
வைங்க திரும்ப கூப்பிடறேன் !
ஹலோ
ஹல்ல்லோஒ.......
ஏம்மா கேக்குதா?
அதற்குள் அம்மா என்றாள் பாப்பா
இதோ வரேண்டா  கண்ணா
இப்போக்  கேக்குதுடி சொல்லு என்றாள் அம்மா
 நாளைக்குப்  பேசறேன்மா என்றேன் 
வழக்கம்போல !





மீண்டும் ஒரு அகிம்சை அண்ணல் !

மீண்டும்  ஒரு  அகிம்சை  அண்ணல் ! 

              நம் பாரத  நாடு சுதந்திரம் பெற்று 64  நன்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் நமது அனைத்து மக்களும் அடிப்படை  வசதிகளையாவது
பெற்றுள்ளார்களா என்றால் நாம் அனைவரும் இல்லை
 என்றே மெளனமாக தலை அசைப்போம்.அதைத்  தவிர நமக்கு வேறு வழியில்லை, ஏனெனில்  தனி மனித சுதந்திரம் இங்கு அவ்வளவு மதிக்கப்படுகிறது. வளர்ச்சித்  திட்டங்கள் கீழ்த்  தட்டு மக்களை சென்று சேராமல் ஊழலும் ,  லஞ்சமும் பெருகிவிட்டது.இத்தகைய நிலையில் நமது உணர்ச்சிகளுகெல்லாம் வடிவம் கொடுக்க தனது  முதுமையையும் பொருட்படுத்தாது ஒரு அகிம்சா  சக்தி போராட துவங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
           
         ஆம்  நான் கூறுவது நமது நாட்டின் ஊழலை  நினைத்து நாம்
 மனதளவில் குமுறிக்  கொண்டிருக்கும் வேலையில் அதனை  துணிவுடன் எதிர்த்து தன் கொள்கையை முன் வய்த்த  அண்ணா அசாரேவைப் பற்றித்தான் .இந்த மாபெரும் அகிம்சை சக்தி 1938  ஆம் ஆண்டு சூன் மதம் பிறந்தார்.இவர் ஒரு சமூக சேவகராக  மகாராட்டிரத்தின் ராலேகாவ் சித்தி எனும் சிற்றூரில் ஆற்றிய பணியால் வெளிஉலகுக்கு தெரிந்தார்.இவரது சமூகப்  பணிகளுக்காக   இந்திய அரசு மிகச்  சிறந்த விருதான பத்ம பூசனை 1992  இல்  வழங்கியது குறுப்பிடத்தக்கது.
             
               இத்தகைய சிறப்பு மிக்க அண்ணா அசாரே அவர்கள் தற்போது
 ஊழலுக்கெதிராக  அரசு தயாரித்துள்ள லோக்பால் சட்டத்தை வலுமிக்கதாக மாற்றி
 அமைக்க வேண்டும் என போராடி வந்தார்.லோக்பால் சட்டத்தில் அணைத்து பிரதிநிதிகளும் 
அரசு சார்புள்ளவர்களாய்  இருப்பதால் எந்த அளவுக்கு இதனால் மக்களுக்கு
 நன்மை இருக்கும் என்ற ஐய வெளிப்பாட்டின் விளைவாகத்தான் 
இதனை எதிர்க்கிறார் அண்ணா அசாரே ,இதற்காகமுன்னாள்
உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே , உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் ஆகியோருடன் ஊழளுக்கெதிரான  இந்தியா  என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவுத் திருத்த குழு ஒன்றை  அமைத்தனர் .
              இது அரசு தயாரித்துள்ள லோக்பால் சட்டவரைவுத்  திருத்தக்  குழுவை   விட வலுவானதாக  உள்ளது. இதன்படி 50  விழுக்காடு பொதுமக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கு பெற வேண்டும் எனவும் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது .இதனை இந்திய அரசு மறுத்த
 நிலையில் அன்ன அசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்து  ஏப்ரல் 5  ஆம் தேதி ஜன் மந்தரில் அதை நடத்தியும் காட்டினார்.
               பல தலைவர்களும் உண்ணாவிரதத்தை கைவிட  கோரினாலும் அன்ன அசாரே தன் முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.மக்களின் பேராதரவுடன் 4  நாட்கள் முடிந்த நிலையில் காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியின் பெரும் முயற்சியால் அரசு நமது அன்ன அசாரேவின் கருத்துக்களை ஏற்றுக்  கொண்டு அவர்க் கூறியபடி  சட்ட வரைவு
திருத்தக்  குழு அமைக்க ஒப்பு கொண்டது.
              
                   இத்தகைய பெரும் வெற்றியை தனது அகிம்சை முறையால் பெற்ற அசாரேவும்,அவரது ஆதரவாளர்களும் ஏப்ரல் 8 ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்தனர் .இந்தியா மக்களுக்கு  இதுவே உண்மையான வெற்றி என அசாரே  கூறினார் .இந்த வெற்றியை மக்கள்  கொண்டாடியும்  நம் அசாரேவின் விடாமுயற்சியை பாராட்டியும் வருகிறனர்.


     சட்டவரைவுத்  திருத்தக்  குழுவின்  சாராம்சம் பின்வருமாறு:  (செய்தி:தட்ஸ் தமிழ்)
      
அரசு சார்பாக பங்கேர்ப்பவர்கள்


நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,


உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்,

சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி,

மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும்

நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

பொதுமக்களின் பிரதிநிதிகள்:

சமூக சேவகர் அன்னா அசாரே


நீதிபதி சந்தோஷ் ஹெக்டே,

சட்டநிபுணர் சாந்தி பூஷன்

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும்

அரவிந்த் கேஜ்ரிவால்


லோக்பால் சட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி


இணைத் தலைவர் : சாந்தி பூஷன்

அமைப்பாளர்: வீரப்ப மொய்லி

               ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்தக் குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும் .
இத்தகைய மாபெரும் வெற்றியை வசந்த மலருடன் சேர்ந்து நீங்களும்
 கொண்டாடுங்கள்.
 வாழ்க அகிம்சை ! வாழ்க இந்தியா! வளர்க  அன்ன அசாரேவின் சேவைகள் !




                            

   
                                    

அது ஒரு பொன்மாலைப் பொழுது!


அது ஒரு பொன்மாலைப் பொழுது
                     வணக்கம் அன்பார்ந்த வாசகர்களே !  "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்
  செய்வீர்  " என்று சொன்ன பாரதி மட்டும் மே 1 ஆம் நாள்  அட்லாண்டஜார்ஜியா டெக் இல்  இருந்திருந்தால்  அளவில்லா உவகைக்
 கொண்டிருந்திருப்பான்  ,அத்தகைய வண்ணம் அருமையானத்  தமிழ்ப் பாடல்களை திருமதி.சோபனா  விக்னேஷ் அவர்கள் பாடினார்.
இந்த மே தினத்தை நாம் கண்ட இசை விழா மிக இனிமையானதாக மாற்றியது என எண்ணுகிறேன்,விழாவிற்கு வந்த அனைவரும்
 மிகச் சிறந்த தமிழிசையில் திளைத்திருந்திருப்பார்கள்  என்பதில் கடுகளவேனும் ஐயமில்லை.
  முதலில் பாடிய சோபனா  விக்னேஷின்  பாடல்களால் அரங்கமே தமிழிசையில்  நனைந்தது ,
அவர் பாடிய 'அசைந்தாடும் மயிலொன்று  கண்டால்' பாடல், கேட்ட  அனைவரது  உள்ளத்தையும் கவர்ந்திழுப்பதாக
  இருந்தது.'துன்பம் நேர்கையில் யாழெடுத்து  நீ  இன்பம்  சேர்க்க மாட்டாயா?' என்று பாடி நம்மை இன்பக் கடலில்
சிறிது நேரம் திளைக்க வைத்தார் ,காற்றோடு கலந்து வந்த அவரது  'காற்றினிலே வரும் கீதம்'   நம்மை மெய் மறக்கச் செய்தது ,
மேலும் பிரம்மம்  ஒன்றுதான் பாடலை வேறு மொழிகளிலேயே அதிகம்  கேட்ட நமக்கு அதன் தமிழாக்கம் புது உத்வேகத்தைக்
 கொடுத்தது ,அதனைத் தொடர்ந்து அவர் பாடிய குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா பாடலிலும் அவர் எந்தக் குறையும்
வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
                  அவர் பாடிய பின் ,அட்லாண்டா தமிழ்சங்கம் சார்பாக டாக்டர் .பத்மினி அவர்கள் சோபனா  விக்னேஷிற்கு
தமிழ் இசை வாணி என்ற பட்டதைக் கொடுத்துக் கௌரவித்தார்.திருமதி சோபனா விக்னேஷைத்   தொடர்ந்து வந்த
ஜெர்சி ரிதம்ஸ் குழுவினர் மிக அருமையான இசை மூலம் நம் மனதைக் கொள்ளைக் கொண்டனர். வெய்யில் படப்
 பாடல் நம்மையெல்லாம்  நம் சிறு வயதிற்கே கொண்டு சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது ! சுவர்ணா மற்றும்
அனிதாவின் "ஒரு கிளி உருகுது" பாடல் நம் உள்ளத்தை   உருக வைப்பதாக  அமைந்தது  ,
மேலும் பல பாடல்களைக்  குழந்தைகளும் பெரியவர்களும் எழுந்து ஆடக் கூடிய வகையில் பாடி
அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தினர் ஜெர்சி ரிதம்ஸ்  குழுவினர் .மேலும் நமது அட்லாண்டா  மக்களின்
 ரசிப்புத் தன்மை ஜெர்சி ரிதம்ஸ் குழுவினரை  வியக்க வைப்பதாக  அமைந்தது என்பது  "இப்படிப்பட்ட ரசிகர்களை
நாங்கள் இதற்கு முன் கண்டதில்லை அருமை" என்று அவர்கள்  கூறியதிலிருந்து  தெள்ளத் தெளிவாக விளங்கியது.
            ஜெர்சி ரிதம்ஸ் குழுவினரைத் தொடர்ந்து பாட வந்தக் கிரிஷ் கல கலப்பாகப்  பேசி அரங்கத்தையும் மகிழ்ச்சியில்
 ஆழ்த்தினார்  ,மேலும் அனைத்து ரசிகர்களையும்  தனது  இனிமையான பாடல்களால்  கவர்ந்தார்.
                               
                                   " காணி நிலம் வேண்டும் பராசக்தி
                                     காணி நிலம் வேண்டும் " என்று அன்றே சொன்னான் பாரதி நமது இசை நிகழ்ச்சியின்
 நோக்கமும் இதேதான் 'அட்லாண்டாவில் தமிழ் மையம் '  இதனைப்  பற்றி  திரு .தங்கமணி  அவர்கள் நிகழ்ச்சியில்
 தெளிவுப்படுத்தினார்.இசை நிகழ்ச்சி நம்மையெல்லாம் மகிழ்வித்ததோடல்லாமல்,  நமது உயரிய நோக்கம் நிறைவேற
உறுதுணையாய்  முடிந்தது என்பதில் நமது அட்லாண்டா  தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சியடைகிறது, மேலும் இத்தகைய
 வெற்றியை அடைய உதவிய உயர்ந்த உள்ளங்களாகிய உங்களுக்கும் தமிழ்  சங்கம் நன்றியை சமர்ப்பிக்கின்றது  .
                      
                       இமை நேரமும் உன்னை மறக்க மாட்டோம்
                       எம் கடன் ஆற்றாமல் இறக்க மாட்டோம்
                       அமுதத் தமிழைத் துறக்க மாட்டோம்
                       தனக்கென வாழ்ந்தது சாவுக்கொப்பாகும்
                        தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும்
                        தமிழே உனக்கு வணக்கம் .
                                                          - பாரதிதாசனார் .

மேற்கண்ட பாரதிதாசனாரின் வாக்கிற்கேற்ப  விரைவிலேயே நமது இலக்கை  நம்  முயற்சியாலும் ,தமிழ் மக்களின்
ஒத்துழைப்பாலும்   அடைவோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .
                                         வாழ்க தமிழ் !வளர்க தமிழ் மொழி !


கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்!
                                                       இந்த வருடத்தின் மிகப் பிரசித்தி பெற்ற திருமணமாக ஏப்ரல் 29 ஆம் நாள் இளவரசர் வில்லியம் ,கேட்ஸ் மிடில்ட்டனின் திருமணம் நடந்து முடிந்தது.மறைந்த இளவரசி டயானா,சார்லஸ் ஆகியோரின் மகனான வில்லியமிற்கும், கேட் மிடில்ட்டனுக்கும்  புராடஸ்டன்ட் முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் நடந்தது.நடந்து முடிந்த திருமணத்தால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டது என்பது பரவலான கருத்தாக லண்டனில் பேசப்பட்டது ,அதெல்லாம் ஒருபுறம் இருக்க  நமது இந்தியாவின் பழம் பெரும் திருமண முறைகளைப் பற்றி சிறிது பார்க்கலாம் வாருங்கள் !
                                                        
                                          நமது ஒட்டு மொத்த இந்தியர்கள் ஆகட்டும் ,தமிழர்கள் ஆகட்டும் திருமண பந்தத்தை இன்றளவும் மிக உன்னதமான வாழ்க்கையின்     அங்கமாகவே கருதுகின்றனர்.நம் நாட்டில்  பல பிரிவைச் சார்ந்தவர்களும் ஐக்கியமாவதற்கு முன்பாகவே  இருந்த இந்து மதத்தின் முறைப்படி 8 வகையான திருமண முறைகள்  வரையறுக்கப்பட்டுள்ளது  ,அவையாவன பிரம்மா திருமணம்,தைவா திருமணம்,அர்சா திருமணம்,பிரஜபத்திய திருமணம் ,காந்தர்வா திருமணம், அசுரா திருமணம் ,ராட்சச திருமணம்,பைசாச திருமணம் .
                             இதில் பிரம்மா திருமண முறையும்,பிரஜபத்திய முறையுமே  இன்றளவும் பெரும்பான்மையாக நடைமுறையில் உள்ளது முதல்  முறைப்படி மணமகன் வீட்டார் தனது மகனுக்கேற்ற பெண்ணை பெண் வீட்டாரின் குடும்ப பாரம்பரியத்தைக் கொண்டு தேர்ந்தெடுத்து பெண் கேட்பார்கள் ,பெண் வீட்டார் மணமகனின் கல்விதகுதிகளை ஆராய்ந்து தனது பெண்ணை கொடுக்க ஒத்துக் கொள்வர் . இரண்டாவது முறைப்படி பெண் வீட்டார் தனது பெண்ணுக்கேற்ற மணமகனைத் தேடி மணமுடிப்பார்..காந்தர்வ திருமணம் என்பது இன்றையக்  காதல் திருமணம் என்றுக் கூறப்படும் வகையைச் சேர்ந்ததாகும்.இதனைத்  தான்  நமது  சங்க  இலக்கியங்கள்  களவியல்  என்றுக்  கூறுகின்றது .எடுத்துக்காட்டாக தொல்காப்பியர்  கூறும் களவியல் பண்பாட்டைக் காண்போம் ,
                  
                   "ஒன்றே வேறே என்றிருபால் வயின் 
                    ஒன்றி யுயர்ந்த பால தாணையின்
                    ஒத்தக் கிழவனும் கிழத்தியும் காண்ப
                    மிக்கோ னாயினும் கடிவரை யின்றே"(களவியல் -௨)

திருமணத்திற்கு உரிய பருவம் எய்திய ஆணும் பெண்ணும் தாமே எதிர்ப்பட்டு
காதலித்து மணந்துக் கொண்டனர் ,இவ்வாறு மணப்பது அவரவர் விதியின் வழியே நிகழும் என்கின்றார் தொல்காப்பியர் .மற்றத் திருமண முறைகள் இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு நமக்கு ஒவ்வாதவை ஆகும்.(நன்றி:வெட்டிங்.ஐலவ் இந்தியா.காம்)

                            நமது இந்தியாவின் பலப் பகுதிகளில் திருமணப் பந்தத்திற்கு
மாங்கல்யம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.அதே போல் திருமணத்திற்கான அடையாளமாக குங்குமம் ,மஞ்சள்,வாழை மரம் இவை எல்லாம் நமது தமிழகத்தின் வழக்கமாக உள்ளது .திருமணத்தின் போது நமது உறவினர்களெல்லாம் புதிதாக மனம்  முடிப்பவர்களை வாழ்த்துவதும், திருமண வீட்டார்  வாழ்த்தியவர்களுக்கு  நல்ல உணவிட்டு வழி அனுப்புதலும் தொன்று தொட்டே நமது பண்பாடாக இருந்து வருகின்றது.இத்தகைய திருமணங்களை ஆடம்பரமில்லாமலும், வறியோருக்கு உணவிட்டு ஆசி பெற்றும் நடத்தும் வழக்கத்தை அத்திப் பூத்தார் போல் எவரேனும் ஆங்காங்கே செய்து கொண்டுதான் உள்ளனர்.
                                                 
                            இத்தகையச்  சிறப்பு பெற்ற திருமண பந்தத்தால் தோன்றும் இல்வாழ்க்கையைப் பற்றி வள்ளுவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார் .
                         
                                "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
                                பிறன்பழிப்பது  தில்லாயி னன்று" .

அறம் என்று சிறப்பித்துச்  சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும் ,அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றமில்லாமல் இருந்தால் மேலும் நன்மையாகும்.வள்ளுவரின் இந்த வாக்கை  பின்பற்றி வாழ்ந்தாலே நம் வாழ்க்கை இனிமையானதாக இருக்குமல்லவா!

இனிமையானதோர் இசைப்பயணம்

                         இனிமையானதோர் இசைப்பயணம்

வணக்கம் வசந்தமலர் அன்பர்களே ,
                                                                            
                                                                 இசை என்பதே நம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக்கூடிய ஒரு அற்புத உணர்வு என சொல்லலாம்.
இந்த  மேன்மையான வரம்  பல காலங்களாக ,பல விதமாக நமக்கு எவ்வாறெல்லாம் கிடைத்து வருகிறது என நாமெல்லாம்
 காணப்  போகும் பயணமிது.
                 சொல்வதென்றால்  இசை எனும் சமுத்திரத்தை நம்மால் வரையறுக்க இயலாது, எனினும்  நமது தமிழ் நாட்டில் எவ்வாறான இசையெல்லாம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது  என பார்க்கும்வண்ணம் இதனை மூன்றாக இனம் பிரித்துக் கொள்ளலாம் ,

                                              1.பழந்தமிழிசை
                                              2.கருநாடக இசை
                                              3.நாட்டுபுற இசை
பழந்தமிழிசை:

            
                         பழந்தமிழிசையானது அதனோடு இணைந்த கூத்து என்ற கலையோடு ஏறத்தால மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே தோன்றியிருக்க கூடும் என கருதப்படுகிறது  ,
ஏனெனில் ஏறத்தாழ  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை ,கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் தமிழ்
நூல்கள் தமிழகத்தில் எழுதப்பட்டுள்ளது .சங்கத்தமிழ் நூல்களான
எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ,தொல்காப்பியம் மற்றும் ஐம்பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் போன்ற நூல்களின்
பாடல்கள் மூலமாக நமது தமிழிசையை பற்றி அறிய முடிகிறது.



                        எட்டுத்தொகை நூல்களில் எழாவதாகிய அகநாநூறில் யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் ஒரு பெண் என்பதாக இயற்றப்பட்ட  பாடல் கீழ் வருமாறு

 பண் : குறிஞ்சி

உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்

கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;

உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு

ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
5
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி

பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;

குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,

படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென

மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
10
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,

தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,

காவலர் அறிதல் ஓம்பி, பையென

வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,

உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
15
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!

இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன்

நல்காமையின் அம்பல் ஆகி,

ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்

இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?
மேலும் எட்டுத்தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூறில் இசையின் மூலம் அரசரிடம் பரிசு பெறும் புலவரைப் பற்றின பாடலாவது,

                     


அரி மயிர்த் திரள் முன்கை,
வால் இழை, மட மங்கையர்

வரி மணல் புனை பாவைக்குக்

குலவுச் சினைப் பூக் கொய்து,
தண் பொருநைப் புனல் பாயும்,

விண் பொரு புகழ், விறல் வஞ்சி,

பாடல் சான்ற விறல் வேந்தனும்மே,

வெப்பு உடைய அரண் கடந்து,

துப்பு உறுவர் புறம் பெற்றிசினே;
10
புறம் பெற்ற வய வேந்தன்

மறம் பாடிய பாடினியும்மே,

ஏர் உடைய விழுக் கழஞ்சின்,

சீர் உடைய இழை பெற்றிசினே;

இழை பெற்ற பாடினிக்குக்
15
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே,




என ஆங்கு,

ஒள் அழல் புரிந்த தாமரை

வெள்ளி நாரால் பூ பெற்றிசினே.

பொருள்:   
ஐய மயிரையுடைய திரண்ட முன்கையினையும் தூய ஆபரணத்தையுமுடைய பேதைமகளிர் வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்தபாவைக்கு வளைந்த கோட்டுப்பூவைப் பறித்துக்குளிர்ந்த ஆன் பொருந்தத்து நீரின்கட் பாய்ந்துவிளையாடும் வானைமுட்டிய புகழினையும் வென்றியையுமுடைய கருவூரின்கட் பாடுதற்கமைந்த வெற்றியையுடைய அரசனும், பகைதொறும் வெம்மையையுடைய அரணை அழித்து வலியோடு எதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்;அப்புறக்கொடையைப் பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப்பொலிவுடைய சிறந்த பலகழஞ்சாற் செய்யப்பட்ட நன்மையையுடைய அணிகலத்தைப் பெற்றாள்;அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்குமுதற்றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணனும், விளங்கியதழலின் கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய வெள்ளி நாராற் றொடுத்த பூவைப் பெற்றான் .
  
                            இந்து சமய மறுமலர்ச்சி காலமான கி.பி .ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை தோன்றிய அப்பர் சம்பந்தர் ,மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தமிழிசைக்கு புத்துயிர் அளித்தனர் .ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியர் எழுதிய அகத்தியமே தமிழ் இலக்கண ஆதி நூலாக கருதப்பட்டு வருகிறது.


                              தமிழ் இலக்கண நூலில் நமக்கு முழுவதுமாக கிடைக்கபெற்ற நூல் தொல்காப்பியமாகும் ,இதன் மூலம் பழந்தமிழ் இசையினைப் பற்றிய அறிய பல தகவல்களை நாம் அறியலாம் .தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.

" தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப  "
இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பெருட்கள்  சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருட்கள் . ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.

               தொல்காப்பியம் கூறும் யாழ் என்பது பண்ணிசையை குறிக்கிறது ,பண்ணிசை என்பது மிடற்றிசை(வாய்பாட்டு ) ,நரம்புக் கருவியிசை,காற்றுக் கருவியிசை என நெறிமுறை படுத்தபடுகிறது.சங்ககாலத்தில் யாழிசைக்கும் மிடற்றிசைக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. யாழிசையின் அடிப்படையில்தான் மிடற்றிசை வழங்கியது. அதாவது மிடற்றுப்பாடல் யாழிசையோடு சேர்த்துத்தான் பாடப்பட்டது. மிடறும் நரம்பும் இடைத்தெரிவின்றி இசைக்கப் பெறுதல் வேண்டும் என்பது பண்டைய இசை நியதி.

 


                           தொல்காப்பியர் கூறும் "பறை" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின்  முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

                 நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.

                                      தமிழிசையின் மகத்துவம் நிலைத்து வாழவேண்டும் என்று பண்டைத்தமிழ் மக்கள் நினைத்தார்கள் எனவே  ஆலயங்களிலே இசைத்தூண்களை அமைத்தார்கள். அந்தத் தூண்களை தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும்.

 
            மேலும் இசை சிற்பங்களையும்,இசை கல்வெட்டுக்களையும்
மிகப் பெரிய இசைச்  சான்றாக  கோவில்களின் வாயிலாக நமக்கு வழங்கியுள்ளனர் நமது பழந்தமிழர்கள்.

                இன்று மேலைநாடுகளில் சிறப்பாக நடத்தப்படும் கூட்டு வாத்திய இசை அமைப்பு முறை மேனாடுகளில் செயற்படத்தொடங்கியதிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்க காலத்தில் இசைக்கருவிகளின் கூட்டு இசையை அமந்திரிகை,பல்லியம் எனத்  தமிழர்கள் கூறி வந்துள்ளனர்.

கருநாடக இசை :
                                     அக்காலத்தில் தென்னிந்தியா முழுமையையும் கருநாடகம் என்றே அழைத்தனர். இசையிலே மிகுந்த ஈடுபாடு
கொண்ட  சோமேஸ்வர புல்லோகமால் என்ற மகாராஷ்டிர  அரசன்
தமிழகத்தின் இசையால் கவரப்பட்டு அதனை கருநாடக சங்கீதம் என அழைத்தான் என தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


                                கருநாடக இசை உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகரஜசுவமிகள் ,முத்துசுவாமி  தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கருநாடக இசையின்  மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கருநாடக இசையின்  உயிர் நாடியாக உள்ளன.



இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத்தாண்டவர் ,அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ,  என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள் ஆவர்.

               இன்று செழித்தோங்கி இருக்கும் கர்நாடக இசையின் வேர்களானது, ஒன்று தமிழிசையுடன் ஒன்றி வளர்ந்திருக்க வேண்டும் அல்லது தமிழிசையுடனே தோன்றியிருக்க வேண்டும். இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் இன்றைய கருநாடக  இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்கு புதிதாகப் பெயரிட்டும், அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன எனலாம்

 தமிழிசைக்கு நேரான கருநாடக இசையின் சில வழக்குகள் ,


1.பண்ராகம் 
2.தாளம்தாளம் 
3.பதம்ஸ்வரம் 
4.பதம் ஏழுஸ்வரம் ஏழு
5.ஆரோசைஆரோகணம் 
6.அமரோசைஅவரோகணம் 
7.குரல்ஸ (சட்ஜமம்  )
8.துத்தம்ரி (ரிஷபம் )
9.கைக்கிளைக (காந்தாரம் )
10.உழைம (மத்யமம் )
11.இளிப (பஞ்சமம் )
12.விளரித (தைவதம் )
13.தாரம்நி (நிஷாதம் 

     தமிழிசைக் கருவிகள் போலவே கருநாடக இசைக் கருவிகளும்
நரம்பு வாத்தியங்கள்  ,காற்று வாத்தியங்கள், தாள வாத்தியங்கள்
என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது .அவையாவன,


நரம்பு வாத்தியங்கள்
  • யாழ் 
  • வீணை 
  • தம்பூரா 
 காற்று வாத்தியங்கள்
  • புல்லாங்குழல் 
  • நாதஸ்வரம் 
தாள வாத்தியங்கள்
  • மிருதங்கம் 
  • கஞ்சிரா 
  • கடம் 
  • தவில் 
  • ஜலதரங்கம் 
  • உடுக்கை 
  • சல்லாரி 


                          இன்று நமது தமிழகத்திலும் கருநாடக இசையே மேலோங்கி நின்றாலும்,நமது தமிழிசையும் வளர்ந்து  வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
நாட்டுப்புற இசை :
                                      கிராம மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட பாடல்களே நாட்டுப்புற பாட்டு என வழங்கப்படுகிறது .கிராமங்களில் அனைத்து முக்கியமான  நிகழ்வுகளுக்கும் ஒரு பாட்டு பாடப்படுகிறது . கிராமியப்பாடல்கள் பலவகைப்படும்:
  1. ஒழுக்கப்பாட்டு, வேதாந்தப்பாட்டு, பழமொழிப்பாட்டு, இறைவணக்கப்பாட்டு
  2. நலுங்கு, தாலாட்டு, ஆரத்தி, ஊஞ்சல், மசக்கை, நோன்பு, சடங்கு, ஒப்பாரி. இவை குறிப்பிட்ட காலங்களில் பாடப்படுவன.
  3. புதிர்ப்பாட்டு, கோமாளிப்பாட்டு, கும்மி, கோலாட்டம் முதலியவை ஓய்வுகாலங்களில் மன உற்சாகத்திற்காகப் பாடப்படுபவை.
  4. தொழிற்பாட்டு, உழவுப்பாட்டு, நடவுப்பாட்டு ,ஏற்றப்பாட்டு , சுண்ணாம்பு இடிப்பார்பாட்டு, தெம்மாங்கு முதலியவை வேலை செய்யும்போது பாடப்படுபவை.
  5. மழைப்பாட்டு, பிரார்த்தனைப்பாட்டு, பூசாரிப்பாட்டு, புராணப்பாட்டு, விழாப்பாட்டு, சிகிச்சைப்பாட்டு, சுகாதாரக் கும்மிப் பாட்டு என்பவை சில சந்தர்ப்பங்களுக்காகப் பாடப்படுபவை.
]

  கிராமங்களில் இசைக்கப்படும் இசைக்கருவிகள் ,





  • எக்காளம்
  • திருச்சின்னம்
  • கஞ்சிரா
  • பூசாரிக் கைச்சிலம்பு
  • தவண்டை
  • உடுக்கை
  • தம்பட்டம்





  •                  

    மேலே நாம் கண்ட மூன்று வகையான இசையைத் தவிர
    இன்றைய சூழலில் நமக்கு மிகவும் நெருக்கமான இசையாக திரையிசை உள்ளது ,இந்த  திரை இசை மேற்கண்ட மூன்று இசையின்
    கலவையாக உள்ளது எனலாம்.தற்போது இசையைப் பற்றி அறியாத பல்வேறு தரப்பட்ட மக்களையும் இசை எனும் அற்புத உணர்வு ஆள்வதற்கு  இந்த திரையிசையே மூல காரணமாக உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது... திரையிசையை பொறுத்த வரை பாலினை உண்டு நீரினை பிரித்து வைக்கும்  அன்னம் போல வேண்டாதவற்றை விட்டு விட்டு நல்ல இசையை மட்டும் நாம் பிரித்துக் கொள்ளலாம் .

         
         வசந்தமலர் அன்பர்களுக்கு இசையை பற்றிய இந்த பயணம் சுவையானதாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.துன்பங்களைத் துறந்து இசையோடு இன்புற்று வாழ்வோம் .
     

    நன்றி :விக்கிபீடியா ,தமிழ்வு.காம்















                                                        
                                       



                                       

                                 
                                                                    

    கனவு

                                  கனவு

    முத்தமெல்லாம் நீர்த்  தெளித்து
    மொற மொற என அதைக் கூட்டி
    சார சரக்கும் சேலை கட்டி
    வாசல் நிறைந்த கோலமிட்டு
    முன் வாசல் முழுதும் அம்மா திறக்க !
    ஐயோ !முன்பனி என் மூச்சை பிசைந்தது
    அப்படியே போர்வையோடு உருண்டு
    தள்ளி சென்று நானுறங்க,
    பட பட ,படாரென பாத்திரங்கள் உருளுதங்கே
    இத்தனை  இம்சைகளா ?
    இனிமையாய் நான் உறங்குகையில் !
    அத்தனையும்  பொறுத்தருளி
    பொதி மூட்டை போல் உருண்டு கிடக்க
    கத்தியைப் போல் கதிரவன் அவன்  தன்
    கரங்களால் என் முகத்தில் குத்த,
    கழுதை வயதில் காலை விடிந்தும்
    உருண்டு பிரளும் பெண்பிள்ளை
    அடுத்தவன் வீட்டுக்குப்  போய்
    அதிகாலை இப்படியே தூங்கினா
    ஆறே மாசத்துல மறுபடி
    இங்கேயே  வந்து நிப்பா அழகு மக!
    ஐயகோ ! வாடைக் காற்றும்,
    வந்தெழுப்பும் , ஆதவனையும் விட
    அம்மா வாய் திறந்தாள்? அவ்வளவு தான் !
    இப்படி எண்ணிக்  கொண்டு விழுந்தடித்து
    எழுந்து அமர்ந்து கண்ணை கசக்கினால்
    என் கடிகாரமும்  என்னை எழுப்பிற்று !
    திக்கறியாமல் முன் வாசலையும்
    முற்றத்தையும் தேடினேன் நான்
    எல்லாம் கடந்து ஏழு வருடங்கள்
    ஆனது என மறந்து ,
    தூக்கம் கலையாமல்   !!!!!!





    புதிதாய் பிறப்போம் புத்தாண்டில்

                                                    புதிதாய் பிறப்போம் புத்தாண்டில்


    பூவாய் பிறந்திருப்போமாயின் 
    சில நாளில் உதிர்ந்திருப்போம் 
    மணம் வீசிய பெருமையிலே !

    கார்மேகமாய் பிறந்திருப்போமாயின்  
    சில நொடியில் கரைந்திருப்போம் 
    மழை தந்த பெருமையிலே !

    மரமாய் இருந்திருப்போமாயின் 
    சில காலத்தில் அழிந்திருப்போம் 
    நிழல் தந்த பெருமையிலே !

    மனிதனாய் பிறந்து விட்டோமே 
    மண்ணோடு மட்கும் நாளுக்கு முன் 
    மாற்றங்கள் பல செய்வோமா ?

    எளியவருக்கு இரங்குவோம் 
    கொடுமை கண்டு பொங்குவோம் 
    பொல்லாமயை பொசுக்குவோம் 
    பொறுமை தனை பழகுவோம் !

    நம் மனதுக்குள் இருக்கும் 
    தீப்பிழம்பு  -எரிக்கவேண்டும் 
    இல்லாமை 
    தீமை 
    கொடூரம் 
    வஞ்சகம் 
    பாவம்  , பின் பிறக்க வேண்டும் 
    புத்தாண்டில் புதுமனிதர்களாய்  !!!









    வசந்தத்தின் வாசலிலே!

    கொத்துக் கொத்தாய்  பூத்துக் குலுங்கும் 
    கொள்ளை அழகு வெள்ளை மலர்கள் 
    அத்தனையும் சுமக்குமிந்த 
    மரங்களெல்லாம் மமதையிலே !

    நித்தம் நித்தம் கண் வழியே -நிழல் 
    ஓவியம்  படைக்க வைத்தாய் 
    முத்தமிட்டு காற்றிலாடி- உள் 
     மனதை வருடி  வைத்தாய் !

    வியந்து உன்னை பருகி நின்றேன் 
    விழி வழியே அனுதினமும் -நீ 
    விழுந்து விட்ட பின்னாலே 
    விழி ஏங்கி போவேனோ ?

    இதோ ,
    ஒரு திங்கள் ஆன பின்னே 
    வெண் பட்டை  கலைத்து நின்றாய் 
    பச்சை பட்டை உடுத்தி விட்டாய்  !
    பார்ப்பவர் கண்களிங்கே 
    பழுதாகி போகுமல்லோ ?

    எத்தனை அழகை நீயும் 
    ஏந்தி இங்கே வாழுகிறாய் 
    பித்தனை போல  என்னை 
    பிதற்ற வைத்து மகிழுகிறாய் !


    தேன் சுமந்த வண்டுகளின் 
    தேமதுர ரீங்காரம் !
    முனகிக்  கிடந்து  வைக்கும் 
    மூங்கில்களின் உரசலும்!

    பஞ்சு மெத்தை போல இங்கு 
    பரவிக் கிடக்கும் புல்வெளியில் 
    தத்தி  தாவி  ஓடி நிற்கும் 
    முயலுமிங்கே ஓரழகு !

    சிந்தனையை சிதற வைக்கும் 
    சிட்டுக் குருவியும் ஓரழகு !
    துள்ளி துள்ளி வந்து நிற்கும் 
    புள்ளி மானும் ஓரழகு !

    அள்ளி தெறித்து நீரில் குதிக்கும் 
    கயலுமிங்கே ஓரழகு !
    மெல்ல மெல்ல தலையை தூக்கும் 
    ஆட்பிடியனும்(முதலை) ஓரழகு !

    பட்டு போன்று பறந்து போகும் 
    பட்டாம்பூச்சி ஓரழகு !
    பந்து போல சுருண்டு நிற்கும் 
    அணிலுமிங்கே ஓரழகு !

    இயற்கை தனை அள்ளி வரும் 
    வசந்தமது ஓரழகு ! இக்கணம் 
    கவலை தனை களைய வந்த
    வசந்தம் நம் வாசலிலே !













    விண்ணில் மறைந்த சிறகுகள் !


           "உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் ; மற்று அது
            தள்ளினும் தள்ளாமை நீர்த்து "

                   எண்ணுவதெல்லாம் உயர்வை பற்றியே எண்ண  வேண்டும்,அவ்வுயர்வு கைகூடவிட்டலும் உயர்வாக எண்ணுவதை கைவிடக்கூடாது என்னும்,தெய்வப் புலவரின் வாக்கிற்கிணங்க தன்  வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தும் , இன்ன பிறரும் லட்சியங்களை அடைவதற்கான வழி முறைகளை ஈந்தும் நின்ற அவுல் பக்கிர்  ஜைனுலாபுதீன்  அப்துல்கலாம் என்னும் உயர்ந்த ஆத்மா இதோ இன்று தன் பூத உடலை விட்டு விலகி விட்டது.
               
                    இன்று நம்மை விட்டு மறைந்தது அம்மாமனிதனின்  உடல் மட்டுமே ,
    ஆனால் அவர் விதைத்த சீரிய சிந்தனைகள்,உயர்ந்த நோக்கங்கள் எனும் விதைகள்  ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் முளைவிட்டுள்ளது ,
    அது வளர்ந்து விருட்சமாகி உலக அரங்கில் நாம் மிளிரும் நாள் மிக அருகிலே!
    அதுவரை அவரது உன்னதமான ஆத்மா நம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கையில் ,நமது நாட்டின்   தலைச் சிறந்த மனிதரான திரு .அப்துல் கலாம் அவர்களை  இழந்து வாடும் அனைவருக்கும் எனது  ஆழ்ந்த இரங்கலை பின்வரும் கவி மூலம் கூறிக் கொள்கின்றேன் !

    எம்முள் !
     
                      அக்கினி சிறகுக் கொண்டு
                      அணையா நெருப்பூட்டி
                      மண்ணோடு மைந்தனாகி
                      விண்ணோடு கரைந்து சென்ற
                      மாமனிதா! இன்று
                      எம்மோடு இல்லாமல் யாருக்காய் ?
                       எங்கே கனவு காண்கின்றாய் ?
    ஐயகோ !
                       மூடிய உன் இமைகள் திறக்கும் என
                       எம் இமைகள் மூட மறுக்கிறதே !
                       கதறி அழும் பாரதத் தாயுடன்
                        பார் உலகமும் அழுகின்றதே !
                        மகவைப் பிரிந்த அன்னையாய்
                        மாரடித்து  தவிக்கிறதே !
                        உறங்க விழி மறுக்கிறதே -உன்
                        உறக்கம் உதறி வருவாயா?
    காலனே !
                       கால நேரம் இல்லாமல்
                       கடமைக்காய் காலத்தைக்  கரைத்து
                       கல்லுக்கும் ,புல்லுக்கும் கூட
                       கனிவான முகம் காட்டி கடந்து வந்தாய் ,
                       களைப்பு மிக வந்து விட்டது -கோமகனே
                       என்னோடு வந்துவிடு !
                       விண்ணோடு கரைந்து விடு !-என
                       உன்னோடு கூட்டி  சென்று விட்டாயா ???

                       மாற்றான் முன் நம்
                       மண்ணை நிமிர வைத்த
                       மாமனிதா!-உன் தாய்
                       உன்னை பெற்றெடுத்த கணத்தை  விட
                       இன்று  கர்வத்திலே கனத்திருப்பாள் !
                       மக்களெல்லாம்  உன்னை
                      வானுயரப்  புகழ்வதைக் கண்டு  !
         

                      ஊண் ,உறக்கம் அனைத்தையுமே
                      ஊருக்காய் உலவ விட்டு !
                      அன்பை அணிகலனாய் !
                      பண்பைப்  பட்டாடையாய் !
                      உண்மையை உறையாய் !
                      தன்மையைத்  தாயாய்  கொண்ட
                      மன்னவனே !-உன்னை
                      மண்ணுலகமும் ,விண்ணுலகமும் -உள்ளவரை
                      உலகம் மறவாது!
                 
                      மரத்த மனமிது-உன்
                      மரணத்தை மறுக்கிறது !
                      கனத்த மனமிது -உன்
                      கனவுகளை சுமக்கிறது !
                      உம்  விழி மூடினாலும்
                      எம் விழிகளில் -உன்
                      கனவுகள் மெய்படட்டும் !
                      உம்  உடல் உறங்கினாலும்
                      எம்  உடல்களில்  -உன்
                      இலட்சியங்கள் குருதியாகட்டும் !
                      பாருலகம் போற்ற இப்பாரதம்
                      தலை நிமிரட்டும் !
                      தாய் மண்ணே வணக்கம் !
                     
       



    \
                     
                     
                     


                     



                                                          காற்றில் கரைந்த இசை.


    "தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத்  தமிழ் எங்கள்
    உயிருக்கு நேர் ,உயிருக்கு நேர் ."
                            இந்தப் பாடல் வரிகளை படிக்கும்போதே நம் மனிதிற்குள் கரைந்திருந்த இப்பாடலின் இசை நம் உதடுகளின் வழியே பயணம் செய்கிறதா? இதுபோல் பல நூறு பாடல் இசைகளின் தலைவன்,  அவர் இசை போலவே காற்றோடு கரைந்து விட்டார் ,ஆம்  நம் தமிழ் மண்ணின்  மிகச் சிறந்த இசைத் தலைவனை  இழந்து  இசையோடு, தமிழும் தான் வாடிப் போய்  கிடக்கின்றது.இத்தகைய மாமனிதனின் வாழ்க்கைப்  பயணத்தை பற்றிய இக்கட்டுரையோடு நாமும் பயணிப்போம் வாருங்கள் !
                                        விஸ்வநாதன் அவர்கள் , 1928 ஆம் ஆண்டு சூன் 24 ஆம் நாள் மனயங்கத் சுப்பிரமணியன்  ,நாராயணிகுட்டி  அவர்களுக்கு 
    மகனாய் கேரளாவின் எலபுள்ளி என்னும் ஊரில் பிறந்தார்,தனது நான்காம் வயதில் தந்தையை இழந்த விஸ்வநாதன் அவர்கள் கண்ணூரில்   தனது
    தாத்தா வீட்டில் வளர்ந்தார் , கண்ணூரில் உள்ள ஜூபிடர் திரையரங்கின் வெளியில் தின்பண்டங்களை விற்றுக் கொண்டே திரைப்படத்தின் பாடல்களை கேட்டு தனது இசை அறிவை ஆரம்பத்தில் வளர்த்துக்  கொண்டார் .
                                          கண்ணூரில்   நீலகண்ட பாகவதரிடம்  தனது ஆரம்ப கல்வியை பயின்ற விஸ்வநாதன் சிறுவயதில் ஆர்மோனியம்  வாசிப்பதில் சிறந்து விளங்கினார் , அவரது வாசிப்பை கேட்டு வியந்த   நீலகண்ட பாகவதர்
    எம்.எஸ்.வி அவர்களின் 13 ஆம் வயதில் கண்ணூர் டவுன் ஹாலில் மூன்று மணி நேர ஆர்மோனியக்  கச்சேரிக்கு  ஏற்பாடு செய்து கொடுத்தார். 1940 ஆம் ஆண்டுகளில் ஜுபிடர் திரைஅரங்கில் ஆபீஸ் பாயாக 3 ரூபாய் ஊதியத்திற்கு
    வேலைக்கு சேர்ந்தார் திரு .எம்.எஸ்.வி  .பின்னர்  இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
                                          
                                               உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள் . தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் [4]ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள்.விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார்.
                                        
                                              1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் நாள்  மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.மேலும் இசைப்பேரறிஞர் விருது,கலை மாமணி விருது ,முனைவர் பட்டங்கள் என்ற பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன .

                                              தமிழ்த்திரைப்படத்துறையின் மெல்லிசைக்கு இலக்கணம் வகுத்தவர்கள் என்று வர்ணிக்கப்படும் விசுவநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள், இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் என்கிறார் விஸ்வநாதனிடம் உதவியாளராக பணியாற்றிய ஜி.எஸ். மணி.மேற்கத்திய இசையில் அதிக வல்லமை பெற்ற விஸ்வநாதன், மேற்கத்திய இசையின் பல நுணுக்கங்களை தமிழ் சினிமா இசையமைப்பில் புகுத்தினார் என்றும் அவர் கூறுகிறார்.தனது இளமைக் காலத்தில், தான் முற்றிலும் விஸ்வநாதனின் இசையில் லயித்துப் போயிருந்ததாக கூறும் இசையமைப்பாளர் இளையராஜா, எம்.எஸ்.வி- கவிஞர் கண்ணதாசன் கூட்டணியானது பிரிக்க முடியாத அற்புதமான ஒன்று என்றும் வர்ணிக்கிறார்.
                                              இத்தகைய சிறப்புகள் மிகுந்த எம்.எஸ்.வி  சூன்  மாதம் 24ஆம் நாளன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சூலை 14 ஆம் நாள் மண்ணுலகை  விட்டு மறைந்தார்.அவர் மறைந்தாலும் காற்றும் ,மனிதனும் இருக்கும் வரை அவரது இசை இப்புவியில் நிலைத்திருக்கும்.

                                         


    மூன்றாவது கண் !

                                                                 மூன்றாவது கண்

    ராஜி அதிர்ந்து போய் உட்கார்ந்தாள் !நாற்காலியின் மேலே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ,
    மெதுவாய் மின்விசிறி தன்னை மேலே இழுப்பது போலவும் அதன் நான்கு இறக்கைகளும்   வீட்டை  துளைத்து ஆகாயத்தை நோக்கி  அவளை மேலே தூக்கி எறிந்து விட்டது போலவும் எண்ணி ஒரு நிமிடம் அதிர்ந்தாள் , தன்னை ஒரு வழியாக சுயநினைவுக்கு கொண்டு வந்தாள்,இன்னும் கைகள் நடுங்கி  கொண்டேதான் இருந்தது .
    ஒரு முடிவுக்கு வந்தவளாய் ,அப்படி இருக்க கூடாது!! என எண்ணிக் கொண்டே மீண்டும் எதிரே இருந்த மடி கணிப்பொறியை தன அருகில் எடுத்து வைத்தாள் ........அதனை திறக்கலாம் என எண்ணும் போதெல்லாம் எதோ மிகப் பெரிய பேய் ,பிசாசு அவள் முன் நின்று கொண்டு வா என்னிடம் ....வந்து விடு.....என்று கூறுவது போலவே தோன்றியது .

    உடல் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது !கைகள் நடுங்க அந்த கணிப்பொறியை  திறந்து திருமண வரன்கள் தேடும் இணையத்தை 
    திறந்தாள் ....ஏற்கனவே சற்று முன்பு திறந்து ,கணக்கு வெளியேறாமல் இருந்ததால் அவளை நேரே அந்தப் பக்கத்திற்கே கொண்டு சென்றது,பெயர் -ராஜேஷ் ,வயது-30 ,எல்லாம் சரியாக இருந்தது ,திருமணத்திற்கு பெண் வேண்டும் என நேற்று தேதியில் மாற்றியிருப்பதை மீண்டும் சரி பார்த்துக் கொண்டாள்.

    நான் ராஜி .... வயது 29 ஆகிவிட்டது என வீட்டில் அரக்க ,பறக்க மாப்பிளை தேடும் படலம் சென்றுக் கொண்டிருந்தது ,வழக்கம் போல வாரம் ஐந்து பேராவது தொலை  பேசியில் அழைப்பார்கள் ,பெண் பெரிய கணிப்பொறி  அலுவலகத்தில் வேலையில் 
    இருக்கிறாள் ,மாதம் 85,000 ஊதியம் என்றால் அதிகம் தானே?

    அன்றும் , அம்மா தான் கத்திக் கொண்டிருந்த தொலை  பேசியை எடுத்தாள் ,மறுமுனையில் கனிவான ஆணின் குரல் கேட்டது ,அம்மா எல்லாவற்றிற்கும் ஆமாம் போட்டு கொண்டிருந்தாள் !!
     ம் ...
    மிகவும் நல்லது ...
    இந்த வெள்ளிக்கு கிழமையா?
    பாப்பாவிடம்  ஒரு வார்த்தைக்  கேட்டு சொல்கிறேன்...

    என்றவள் என்னிடம் திரும்பி இந்த வெள்ளி கிழமை அஞ்சு மணிக்குள்ள வேலை  முடிஞ்சுரும்ல ? ஆறு மணிக்கு வந்திருவியா ? எனக் கேட்க ஆமாம்  என நான் தலை அசைப்பது தெரிந்தவுடன் ,வேறு எந்த கேள்வியையும் என்னிடம் எதிர் பார்க்க விரும்பாதவளாய் ,நீங்க கட்டாயம் வாங்க ....மிகவும்  மகிழ்ச்சி ...பார்க்கலாம் அப்போ !என்றவாறே தொலை  பேசியை  வைத்தாள் .

    நானும் தலையை சீவி பின்னல் போட்டுக் கொண்டே யாராம்?எனக் கேட்டேன்...இருக்கும் ஆர்வத்தை வெளியில் காட்டாமல் ....

     பையன் பேசுறான்...பெரிய அலுவலகத்தில் தான் வேலையாம் ..
    நல்ல சம்பளமும் கூட ...உன்னை விட ஒரு வயது மூத்தவன் ...அம்மா,அப்பா 
    இல்லையாம் ...உன் போட்டோவை திருமண இணையதளத்தில் பார்த்துட்டு 
    பிடிச்சுருச்சு போல ,அதான் பார்க்க வரட்டுமா வெள்ளி கிழமைனு கேட்கிறான் .....நாமளும் எதனை வருசமா மாப்பிளை பார்க்கிறோம் ,
    அது இல்லை இது இல்லை ,அப்பா இல்லாத குடும்பம் என எல்லாரும் தட்டி 
    கழிக்கிறாங்க ,இது தானா வருது ,அடக்கமாய் பேசுது அந்த பிள்ளையும் ....
    பார்ப்போமே ?அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி ...என மூச்சு விடாமல் என் பின்னலேயே வந்து எல்லாவற்றையும்  சொல்லிவிட்டு ...கடைசி வாய் தோசை நான் விழுங்குகையில் என் முகத்தை தூக்கி பார்த்தாள் !!!!

    சரிம்மா ...நீ சொன்ன நான் என்ன வேணம்னா சொல்ல போறேன் ? பார்ப்போம் என்றவாறே  பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் !!!!
    வெள்ளிக்கிழமையும் வந்தது ....அலுவலகம் முடிந்து வந்து குளித்து விட்டு நல்ல  காட்டன் புடவையாக கட்டி கொண்டு தயாராக இருந்தேன்...மணி ஆறை  தொட்டதும் ,வாசலில் இருசக்கர வண்டி வரவும் சரியாக இருந்தது ....

    வாங்க வாங்க என்று அம்மாதான்  முன்னே சென்று வரவேற்றாள் ....
    வெறுங்கையுடன் வந்த மாப்பிளை வீட்டாரை பார்ப்பதும் ,கூட்டமே இல்லாமல் தனி மரமாய் மாப்பிளை  பெண் பார்ப்பதும் அம்மாவிற்கும் சரி... எனக்கும் சரி புது அனுபவம் தான் ....

    காபி கொடுத்ததும் பேச ஆரம்பித்தான் ராஜேஷ் ,...உங்களை பற்றி தகவல்களெல்லாம்  இணைய தளத்தில் பார்த்தேன் ...நீங்க எனக்கு சரியா இருப்பிங்கனு தோணிச்சு அதான் வந்திட்டேன் என நேராக காரியத்திற்கு  வந்த ராஜேஷை பார்த்து அம்மா வாயை பிளந்தவாறே !!!..நாகரிகமாக ,நீங்க பேசிக்கிட்டு  இருங்க இதோ சிற்றூண்டி பண்ணிட்டு வர்றேன்... என அடுப்படிக்குள் நுழைந்தாள் ....

    அவனுக்கு எதிரே உள்ள நாற்காலியில் நான்  அமர்ந்திருந்தேன் ...பேசுங்க ராஜி என்றவனிடம்....நீங்க எங்க படிச்சீங்க ?எந்த வருடம் கல்லூரி  முடிச்சிங்க?
    எப்போ வேலைக்கு சேர்ந்தீங்க ? என வரிசையாக நான் கேள்விகளை அடுக்க அவன் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே ...நீங்க நிறைய நேர்க்காணல் செய்வீங்க  போல அலுவலகத்தில்? என கேட்டது அப்போது எனக்கு அருமையான நகைச் சுவையாய்  தோன்றியது ...என்னை கேள்வி கேட்பதில் இருந்து தடுமாற செய்ய ..அவன் செய்யும் விடயமாக தோன்றாமல் போயிருந்தது.....

    அவனே சொன்னான் ...அம்மா,அப்பா இல்லை ,மாமா வீட்ல தான் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் வளர்ந்தேன் ...அவரும் தவறி போனார் ...
    ...நல்ல மார்க் இருந்ததால் சென்னையில் படிக்க இடம் கிடைத்தது ...இங்கே ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே படித்து முடித்து வேலைக்கும் போய் விட்டேன் ...என்று சொன்னவனின் எந்த ஒரு வார்த்தையிலும் பொய்யின் வாசனையை துளி கூட என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை ...
    அப்படி ஒரு முட்டாளா நன் ? இல்லை யார் என தெரியாத யாரையோ, நம்பி பேச விட்டு சென்ற அம்மா முட்டாளா? இல்லை என்னுடைய வாழ்க்கை எனும் புத்தகத்தில் நான் கிழிக்க  வேண்டிய பக்கங்களை எழுதியே தீர வேண்டும் என எண்ணி , என் முன்னாள் வந்து அமர்ந்திருந்த அவன் புத்திசாலியா? வேதனையில் கண்ணீரைத் தவிர வேறு பதிலுமில்லை , எவரும் துணையுமில்லை  இப்போது ....

    அவன் என்னிடம் பேசிவிட்டு சென்ற இரண்டு நாட்கள் அம்மாவும் நானும் ,அமைதியாகவே இருந்தோம் !!!!ஊர் பேர் தெரியாத ஆளுக்கு எப்படி திருமணம் செய்து தருவது என அம்மாவும் ...உறவுகளே  இல்லாமல் அவனை மட்டும் நம்பி எப்படி செல்வது என  நானும் குழம்பி போயிருந்தோம் ...

    அன்று காலை நான் அலுவலகம் கிளம்பும் முன் அம்மா நான் பாத்துக்கிறேன் !!!நான் அவங்க அலுவலகத்தில  விசாரிக்கிறேன் அவன் எப்படின்னு .... நீ கவலைய விடு ...என அவளுக்கு கூறி விட்டு ,பேருந்திற்கு  நடக்கும்  வழியில் 
    என்னுடன் படித்த ராமை தொலைபேசியில் அழைத்தேன் ....

    ஹே ...ராம் எப்படி இருக்க ? என ஐந்து நிமிடம் பொதுவாக பேசி வைத்தேன்...
    இல்லப்பா ...வீட்ல மாப்பிளை பார்த்திருக்காங்க ,அவர் உங்க பிரிவுலதான் வேலை பார்க்கிறதா சொல்றார் .....பேர் ராஜேஷ் ....எல்லாவற்றையும் கேட்டு  கொண்டு அவன் நான் விசாரிச்சு சொல்றேன் என இணைப்பை துண்டித்து விட்டான் ....

    அடுத்த நாள் காலை ராஜேஷ் கூப்பிட்டான் ...என் கை பேசியில் கூப்பிட்ட அவன் வீட்டிற்கு  கூப்பிட்டதாகவும் ...அம்மா என் எண்ணை கொடுத்ததாகவும் கூறினான் ...பேசிய பேச்சு அரை மணியயை தாண்டியது ...
    எனக்கும் பரிதாபம் வர தொடங்கியது ...யாருமே இல்லை நாம் மனைவியாக  சென்றால் நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என (விபரீதமாக )
    முடிவு செய்தேன் .......அப்பாவை வாழ்க்கையில் அதிகம் பார்க்காததால் யாராவது பெற்றோர் இல்லை என சொன்னால் ... என்னால் தாங்கி கொள்ள முடியாததாயிருந்தது .........

    இரண்டு வாரம் இப்படியே போயிருந்தது ...அதற்குள் அம்மா எங்கள் உறவினர்களோடு சென்று அவன் தங்கியிருந்த வீட்டை  பார்த்து விட்டு வந்தார்கள்....அம்மாவும் அவனின் பேச்சில் மயங்கினாள் ...இருவது பவுன் நகை செய்து வைத்திருப்பதாகவும் ..எல்லாமே எனக்கு என்றும் அம்மாவிடம் கூறினான் ...எல்லோரின் மனமும் ஆமாம் எனக் கூறிற்று ...
    நான் அம்மாவிடம் நாளைக்கு சொல்லிக்கலாம் எனக் கூறி விட்டு ராமிற்கு அழைத்தேன் ..அவனுடைய தோலை பேசி, கூடுமானவரை அவனை அழைத்து விட்டு என்னிடம் தற்போது நீங்கள் அழைக்கும் நபரால் பதில் கூற இயலவில்லை என என்னிடம் மன்னிப்பு கேட்டது.....நானும் ஒருவித குழப்பத்துடன் கைபேசியை அணைத்து பையில்  போட்டுக் கொண்டு பேருந்தை பிடிக்க ஓடினேன்...

    சிலு சிலுவென குளிர் காற்று தலைக்கு மேலே படுவதும்....வயிற்றில் அம்மா கொடுத்த தக்காளி சாதமும் .....தூக்கத்தை வெற்றிலை பாக்கு  வைத்து என்ன ருகில் அழைத்து வந்து விட்டு சென்றது ...தூங்கி ஒரு நிமிடம் விழுந்து ஐயோ அலுவலகம்... என சுதாரித்து உட்காருவதற்குள் என் அறையின் அனைத்து கண்களும் என்னையே பார்ப்பதாய் எண்ணிக் கொண்டேன்....கைபேசி என் பையிலிருந்து வெளியே வர முடியாமல் முனகியது ....ராஜேஷ் தான் கூப்பிட்டான் ...என்ன பண்றீங்க என வழக்கம் போல கேட்க ...அவன் கூறும் கதைகளுக்குள்  நான் சிக்கிக்  கொண்டு எழ முடியாமல் அல்லது முயலாமல் இருந்தேன்....

    மலை கூப்பிடுகிறேன் என அவனுக்கு விடை கூறி விட்டு ,ராமிடம் இருந்து ஏதும் அழைப்பு இல்லை என்பதை உறுதி செய்து விட்டு அம்மாவை கூப்பிட்டேன்....அம்மா சரினு சொல்லுடி என்றாள் ..தன்  மகள் தலையில் இடி விழப்  போகிறது என அறியாமல் அப்பாவியாக !!!

    நான்  சரி என சொல்லி அடுத்த,அடுத்த நாட்கள் நன்றாகவே நடந்தது .....ஒரு வாரம் கழித்து வீட்டிற்க்கு  ராம்  கூப்பிட்டான் ....என் தொலைபேசி எண்ணை   மாற்றி விட்டேன் உன்னிடம் பேச முயற்சி செய்தேன் போன வரம் ... நீ எடுக்கவே இல்லை எனக் கூறினான் ...அப்போதுதான் உணர்ந்தேன் தெரியாத எண் என நான் எடுக்காமல் விட்ட அழைப்புகள் அவனுடையது என ....விதி வலியது ......அடுத்த நாள் அவனை சந்திப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தேன்...

    அன்று மாலையே எளிமையாக தட்டை மாற்றி நிச்சயம் செய்து ..திருமண நாளும் குறிக்க பட்டது...அடுத்த நாள் பட்டு புடவை எடுக்கலாம்,... அடுத்த ஒரு வாரம் எனக்கு பம்பாயில் பயிற்சி முகாம் என ராஜேஷ் சொல்லி இருந்தான்...
    இந்த அலைச்சலில் ராமை பார்ப்பதையே நான் மறந்திருந்தேன் ..இரவு தூங்கும் முன் தொலை பேசி அழைப்பை பார்த்து என்னையே நொந்துக் 
    கொண்டேன்....

    காலை 7 மணிக்கே வீட்டின் முன்பு இரு சக்கர வாகனம் வந்தது ..ராம்  தான் 
    வந்திருந்தான் ...எங்க போன? வர சொல்லிட்டு ..... என காட்டமாய் கேட்டவன் ...அம்மாவை பார்த்ததும் அமைதியாய் பேசினான் ....
    விசாரிச்சேன் ராஜேஷ் இங்க மாற்றலாகி வந்து நான்கு மதம் தான் ஆகுது ...
    அவன் யார் கூடவும் பெருசா பேசுறது இல்ல ...தனியாகவே லஞ்ச் போய்டுவானு எல்லாம் சொல்றனுங்க..இதுக்கு முன்னாடி 'பூனே ' ல இருந்தானாம் ...எதுக்கும் அங்க கேட்கலாமா ? எனக் கேட்டான் ...அதற்குள் அம்மா ...அந்த பிள்ளை தங்கம் பா ...நாங்க நிச்சயம் பண்ணிட்டோம் ...அடுத்த மாசம் கல்யாணம் ..இந்தக் கேட்டதும் ராமிற்கு பதில் ஏதுமில்லை...சரி எனக் கூறி விட்டு சென்று விட்டான் .

    திருமணம் முடிந்தது....இரண்டு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு இருவரும் 
    மலை பிரதேசமெல்லாம் சென்று வந்தாகி விட்டது ....ராஜேஷ் வீட்டிற்கு  வந்த எனக்கு முதல் இடி அவன் இன்னும் நண்பர்களை காலி  செய்யாமல் அதே வீட்டில் வைத்திருந்தது ....உனக்கு கஷ்டமா இருந்த கொஞ்ச நாள் உங்க வீட்ல இரு, நான் வீடு பார்த்ததும் போய்டலாம்..... என அவன் கூறியதைக் கேட்டு அவனோடு என் வீட்டிற்க்கு  வந்தேன் ....ஒரு மதம் கழித்து  என் வேலை பம்பாய்க்கு மாற்றலாக போகிறது என்றான்...ஒன்றுமே புரியாமல் விழித்த என்னிடம்...நீயும் மாற்றல் கேட்டு என்னுடனே வந்திடு என்றான் ...

    அலுவலகத்தில் இதை பற்றி நான் பேசியவுடன் மூன்று மாதத்தில் மாற்றலாகி விடலாம் என மேலதிகாரி எனக்கு சாதகமான பதிலைக் கொடுத்தார்....இதனை ராஜேஷ் எதிர் பார்க்கவில்லை போலும் அவன் இதனைக் கேட்டு நடந்துக்க கொண்ட விதமே சொல்லிற்று...இந்த இரண்டு மாதத்தில் என் பணத்தில் தொண்ணூறு சதவிகிதத்தை அவன் செலவு செய்து விட்டான் !!!அவன் பணம் முழுவது சேமிப்பு எனக் கூறி!!!

    மும்பைக்கு அவன் போனதிலிருந்து பேசுவதில்லை வாரத்திற்கு 7 முறை நானே கூப்பிட்டு அலுத்து போய் ,நாலு முறை,இரண்டு என எண்ணிக்கையை குறைத்துக் கொண்டேன்... புது வேலை கடினம் என அவன் சொல்லியதற்காக....மூன்று மதத்திற்கு பிறகு இன்றைக்கு தான் மும்பை வந்தேன் என்னை வீட்டில் இறக்கி விட்டு உணவு வாங்க சென்றிருந்தான்....

    அந்த இடைவெளியில் தான் அவன் கட்டிலின் அடியில் என்னை எடு என மினுக்கி கொண்டிருந்த மடிக் கணிப்பொறியை எடுத்து திறந்தேன்....பிறகுதான் உங்கள் எல்லோருக்கும் தெரியும் கிணறு வெட்ட பூதம் வந்தக்  கதை......


    என்னையே நானே சமாளித்துக் கொண்டு எழுந்தேன் ...வீட்டை சுற்றி பார்த்தேன் ...ஒரு குடும்பம் நடத்த தேவையான எதுவும் அங்கே வாங்கி வைக்கப்படவில்லை...வெளியில் யாரோ அழைப்பு மணியை அழுத்த அவசரமாய் கணிப் பொறியை மூடி அதன் இடத்திலேயே வைத்து விட்டு,கதவைத் திறந்தேன் தோசை பொட்டலத்துடன் என் முன்னாள் நின்றுக் கொண்டிருந்தான்...

    கடிகார முள்ளின் சத்தமும்...அவன் தோசையை இங்கிதமே இல்லாமல் சவுக்கு... சவுக்கு என சாப்பிடுவதும் மட்டுமே அறையில் கேட்டது....
    என்னால் இரண்டு வாய் கூட சாப்பிட முடியவில்லை ....

    அவன்தான் ஆரம்பித்தான்....எப்போ சேர போற ? 
    எங்கே? என்றேன் ...
    புது அலுவலகத்தில் ....என்றான் .
    இல்லை நான் வேலைய விட்டுட்டேன் என்று பொய் சொல்லி அவன் முகத்தை பார்த்தேன்....
    அவன் முகத்தில் உள்ள அதனை ரத்த நாளங்களும் வேகமாய் இரத்தத்தை பாய்ச்சுவது  போல முகம் சிவந்து கோபமாய் என்னை பார்த்தான்...
    ஏன் ? என்றான்....
    பிடிக்கலை ....என்றேன் சத்தமாக ...
    அவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழுந்து போய்  விட்டான்...

    மூன்று மதத்திற்கு பிறகு பார்த்த கணவனிடம் எதிர்பார்க்காததெல்லாம் கிடைத்த துக்கத்தில் எனது பேச்சே எனக்கு மறந்து போனது போலாகி விட்டது....இரவு வீட்டில் பின் வாசலைத் திறந்து நின்று கொண்டிருந்தான் ...
    மெதுவாய் பேச ஆரம்பித்தேன்...
    ஏன் பேசலை இதனை மாதத்தில் சரியாவே ?இது நான் ...
    நேரம் இல்லை ....அவன் 
    பிரௌஸ் பண்ணலாம் நேரம் இருந்துச்சி? என்ற என்னை முறைத்து பார்த்தான்....
    ஏன் திருமண இணையத்தளத்தில் மீண்டும் பதிவு என போட்டிருக்கு ...தவறுதலாதனே என்றேன் கடைசியாய் ஒரு நம்பிக்கையயை வரவழைத்துக் கொண்டு....

    இல்லை?....என்றான் வெறுமையாக....
    இல்லைனா? என்றேன்....
    இல்லைனா இல்லை....
    ஏன் என்றேன்?

    உன்னை பிடிக்கலை .....சொல்லி சென்று விட்டான் ...

    கடலின் அத்தனை  அலைகளும் கடல் மணலை என் காலடியிலிருந்து பிடுங்கி கொண்டு ..நன்றாய் விழு என என என்னைக் கீழே தள்ளி சிரித்துக் கொண்டே திரும்ப போவது போல் உணர்ந்தேன் ....

    ஒருவன் என்னையும்...என் குடும்பத்தையும் ஏமாற்றி விட்டான் .....
    நான் ஏமாந்து விட்டேன்....
    என் வாழ்க்கையில் வந்த சூரியன் அஸ்தமனமாகி விட்டது ....
    இது என்ன? என்ன ?....உலகமே என்னை சுற்றி சுழல்வது போல இருந்தது .....

    என்னையே சுருட்டி கொண்டு அனைத்து  குப்பைகளும் இரைந்து கிடக்கும்  நடு  அறையின் ஓரமாய் படுத்து உறங்கி போனேன்.....

    காலையில் கண் விழித்த போது  யாருமே இல்லை வீட்டில்....அழுகை முட்டிக்  கொண்டு வந்தது ... 

    நாள் முழுவதும் அவன் வரவில்லை ....அடுத்த நாளும் வரவில்லை ...
    எதோ ஒரு சகதியில் விழுந்து விட்டோம் என புரிந்தவளாய் ஊருக்கு கிளம்பினேன்....எங்கே சென்று யாரிடம் அவனை பற்றி கேட்பது எனப் புரியாதவளாய்....

    உயிர் மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த என்னைக் கண்டு அம்மா அரண்டு போய்  விட்டாள் ....எல்லாம் முடிந்து விட்டது அவன் தொலைபேசி எண்ணை மாற்றி விட்டான் ...மின்னஞ்சல்களுக்கு பதில் இல்லை....

    ஒரு வர காலம் கழிந்தது ....வாசலில் ராமின் வண்டி வந்து நின்றது ...உயிரோட்டம் இல்லாத என்னை பார்த்து அவன் புரிந்து கொண்டுவிட்டான் ,
    அவன் புனே நண்பன் மூலம் சேகரித்த உண்மை எல்லாம் எனக்கு தெரிந்து விட்டது என...நான் எத்தனையாவது பெண் என கேட்டுக் கொள்ள விரும்பவில்லை அவனிடம் .....

    அவன் எங்க இருக்கானு எனக்கு தெரியும் என்றான்?

    எழவே  பிடிக்காத எனக்கு... புது தெம்பு வந்தது ...விருட்டென்று எழுந்தேன் ...எங்க ???என்றேன் ..

    அவன் மும்பைக்கு  ப்ராஜெக்ட் வேலையா போயிருக்கான் ....முடிஞ்சதும்  இங்க வந்திட்டான் ....மும்பைக்கே மாற்றம் வேணும்னு கேட்டிருக்கான் .... மேலதிகாரி  முடியாதுனு சொல்லிட்டார் .

    சரி கிளம்பு என்றேன்....
    எங்கே என்றான்...
    போலீஸ் ஸ்டேஷனுக்கு ...
    பதிலே சொல்லாமல் அம்மாவும்,அவனும் என்னுடன் வந்தார்கள் ....
    புகார் கொடுத்து ஒரு மணி நேரத்தில் என் முன் அவனை போலீசார் கொண்டு வந்து நிறுத்தினர் ...

    ஆறு மதத்திற்கு முன்பு 'புனே' யில் இவன் மேல் ஒரு வழக்கு இருக்கும்மா ...
    படிச்சவங்களா இருக்கீங்க இப்படி ஏமாறலாமா ?என்றார் இன்ஸ்பெக்டர் ....

    அவன் திமிராய் பேசினான்...மாப்பிளை கிடைக்காமத்தானே கட்டிக்கிட்டா ?
    இப்போ வந்து ஐயோ ...அம்மானு சொல்ற..... என்றான்...

    என் இரு கண் போதவில்லை அந்த மிருகத்தை பார்க்க என் மூன்றாவது கண் சுட்டெரிப்பது பொறுக்காமல் தலையை வேறு பக்கம் திருப்பி கொண்டது அந்த மிருகம்....
    என்னென்னமா ஏமாத்தினான்? என்றார் அதிகாரி...

    நகை,பணம் என சொல்ல வந்த அம்மாவை நிறுத்தினேன் ...
    அவன் முகத்தில் தூக்கி எறிந்தேன் அவன் அர்த்தமே இல்லாமல் கட்டிய தாலியை ...திரும்பி பார்க்காமல் நடந்தேன் .... என் முதுகை அந்த மிருகத்தின் 
    பார்வை சுட்டெரித்தது...

    அதிகாரி அவனை அடித்து நொறுக்கி விட்டார்  ,அவன் அலுவலகத்தில் சொல்லி வேலை போய்  விட்டது என்பதெல்லாம் செவி வழியாக கேட்டது....

    இப்போது  என் வாழ்கை புத்தகத்தின் அந்த கருப்பு அத்தியாயத்தை கிழித்து விட்டேன்....உறங்க போகிறேன்....நாளை காலை எனக்கானது.... எனக்கு மட்டுமே .....அதில் யாருக்கும் இடமில்லை... என் நிழலை தவிர!!!

    ( இந்தக் கதையின் கரு எனக்கு செவி வழி வந்த செய்தி...அதனுடன் என் கற்பனையும் சேர்த்து எழுதி உள்ளேன் ! இதனை எழுதுவது மூலம் பல பேர் விழிப்புணர்வடைய  வேண்டும்  என்பதே என் நோக்கம் .......)