"உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் ; மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து "
எண்ணுவதெல்லாம் உயர்வை பற்றியே எண்ண வேண்டும்,அவ்வுயர்வு கைகூடவிட்டலும் உயர்வாக எண்ணுவதை கைவிடக்கூடாது என்னும்,தெய்வப் புலவரின் வாக்கிற்கிணங்க தன் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தும் , இன்ன பிறரும் லட்சியங்களை அடைவதற்கான வழி முறைகளை ஈந்தும் நின்ற அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம் என்னும் உயர்ந்த ஆத்மா இதோ இன்று தன் பூத உடலை விட்டு விலகி விட்டது.
இன்று நம்மை விட்டு மறைந்தது அம்மாமனிதனின் உடல் மட்டுமே ,
ஆனால் அவர் விதைத்த சீரிய சிந்தனைகள்,உயர்ந்த நோக்கங்கள் எனும் விதைகள் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் முளைவிட்டுள்ளது ,
அது வளர்ந்து விருட்சமாகி உலக அரங்கில் நாம் மிளிரும் நாள் மிக அருகிலே!
அதுவரை அவரது உன்னதமான ஆத்மா நம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கையில் ,நமது நாட்டின் தலைச் சிறந்த மனிதரான திரு .அப்துல் கலாம் அவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை பின்வரும் கவி மூலம் கூறிக் கொள்கின்றேன் !
எம்முள் !
அக்கினி சிறகுக் கொண்டு
அணையா நெருப்பூட்டி
மண்ணோடு மைந்தனாகி
விண்ணோடு கரைந்து சென்ற
மாமனிதா! இன்று
எம்மோடு இல்லாமல் யாருக்காய் ?
எங்கே கனவு காண்கின்றாய் ?
ஐயகோ !
மூடிய உன் இமைகள் திறக்கும் என
எம் இமைகள் மூட மறுக்கிறதே !
கதறி அழும் பாரதத் தாயுடன்
பார் உலகமும் அழுகின்றதே !
மகவைப் பிரிந்த அன்னையாய்
மாரடித்து தவிக்கிறதே !
உறங்க விழி மறுக்கிறதே -உன்
உறக்கம் உதறி வருவாயா?
காலனே !
கால நேரம் இல்லாமல்
கடமைக்காய் காலத்தைக் கரைத்து
கல்லுக்கும் ,புல்லுக்கும் கூட
கனிவான முகம் காட்டி கடந்து வந்தாய் ,
களைப்பு மிக வந்து விட்டது -கோமகனே
என்னோடு வந்துவிடு !
விண்ணோடு கரைந்து விடு !-என
உன்னோடு கூட்டி சென்று விட்டாயா ???
மாற்றான் முன் நம்
மண்ணை நிமிர வைத்த
மாமனிதா!-உன் தாய்
உன்னை பெற்றெடுத்த கணத்தை விட
இன்று கர்வத்திலே கனத்திருப்பாள் !
மக்களெல்லாம் உன்னை
வானுயரப் புகழ்வதைக் கண்டு !
ஊண் ,உறக்கம் அனைத்தையுமே
ஊருக்காய் உலவ விட்டு !
அன்பை அணிகலனாய் !
பண்பைப் பட்டாடையாய் !
உண்மையை உறையாய் !
தன்மையைத் தாயாய் கொண்ட
மன்னவனே !-உன்னை
மண்ணுலகமும் ,விண்ணுலகமும் -உள்ளவரை
உலகம் மறவாது!
மரத்த மனமிது-உன்
மரணத்தை மறுக்கிறது !
கனத்த மனமிது -உன்
கனவுகளை சுமக்கிறது !
உம் விழி மூடினாலும்
எம் விழிகளில் -உன்
கனவுகள் மெய்படட்டும் !
உம் உடல் உறங்கினாலும்
எம் உடல்களில் -உன்
இலட்சியங்கள் குருதியாகட்டும் !
பாருலகம் போற்ற இப்பாரதம்
தலை நிமிரட்டும் !
தாய் மண்ணே வணக்கம் !
\
No comments:
Post a Comment