3/1/19

அது ஒரு பொன்மாலைப் பொழுது!


அது ஒரு பொன்மாலைப் பொழுது
                     வணக்கம் அன்பார்ந்த வாசகர்களே !  "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்
  செய்வீர்  " என்று சொன்ன பாரதி மட்டும் மே 1 ஆம் நாள்  அட்லாண்டஜார்ஜியா டெக் இல்  இருந்திருந்தால்  அளவில்லா உவகைக்
 கொண்டிருந்திருப்பான்  ,அத்தகைய வண்ணம் அருமையானத்  தமிழ்ப் பாடல்களை திருமதி.சோபனா  விக்னேஷ் அவர்கள் பாடினார்.
இந்த மே தினத்தை நாம் கண்ட இசை விழா மிக இனிமையானதாக மாற்றியது என எண்ணுகிறேன்,விழாவிற்கு வந்த அனைவரும்
 மிகச் சிறந்த தமிழிசையில் திளைத்திருந்திருப்பார்கள்  என்பதில் கடுகளவேனும் ஐயமில்லை.
  முதலில் பாடிய சோபனா  விக்னேஷின்  பாடல்களால் அரங்கமே தமிழிசையில்  நனைந்தது ,
அவர் பாடிய 'அசைந்தாடும் மயிலொன்று  கண்டால்' பாடல், கேட்ட  அனைவரது  உள்ளத்தையும் கவர்ந்திழுப்பதாக
  இருந்தது.'துன்பம் நேர்கையில் யாழெடுத்து  நீ  இன்பம்  சேர்க்க மாட்டாயா?' என்று பாடி நம்மை இன்பக் கடலில்
சிறிது நேரம் திளைக்க வைத்தார் ,காற்றோடு கலந்து வந்த அவரது  'காற்றினிலே வரும் கீதம்'   நம்மை மெய் மறக்கச் செய்தது ,
மேலும் பிரம்மம்  ஒன்றுதான் பாடலை வேறு மொழிகளிலேயே அதிகம்  கேட்ட நமக்கு அதன் தமிழாக்கம் புது உத்வேகத்தைக்
 கொடுத்தது ,அதனைத் தொடர்ந்து அவர் பாடிய குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா பாடலிலும் அவர் எந்தக் குறையும்
வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
                  அவர் பாடிய பின் ,அட்லாண்டா தமிழ்சங்கம் சார்பாக டாக்டர் .பத்மினி அவர்கள் சோபனா  விக்னேஷிற்கு
தமிழ் இசை வாணி என்ற பட்டதைக் கொடுத்துக் கௌரவித்தார்.திருமதி சோபனா விக்னேஷைத்   தொடர்ந்து வந்த
ஜெர்சி ரிதம்ஸ் குழுவினர் மிக அருமையான இசை மூலம் நம் மனதைக் கொள்ளைக் கொண்டனர். வெய்யில் படப்
 பாடல் நம்மையெல்லாம்  நம் சிறு வயதிற்கே கொண்டு சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது ! சுவர்ணா மற்றும்
அனிதாவின் "ஒரு கிளி உருகுது" பாடல் நம் உள்ளத்தை   உருக வைப்பதாக  அமைந்தது  ,
மேலும் பல பாடல்களைக்  குழந்தைகளும் பெரியவர்களும் எழுந்து ஆடக் கூடிய வகையில் பாடி
அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தினர் ஜெர்சி ரிதம்ஸ்  குழுவினர் .மேலும் நமது அட்லாண்டா  மக்களின்
 ரசிப்புத் தன்மை ஜெர்சி ரிதம்ஸ் குழுவினரை  வியக்க வைப்பதாக  அமைந்தது என்பது  "இப்படிப்பட்ட ரசிகர்களை
நாங்கள் இதற்கு முன் கண்டதில்லை அருமை" என்று அவர்கள்  கூறியதிலிருந்து  தெள்ளத் தெளிவாக விளங்கியது.
            ஜெர்சி ரிதம்ஸ் குழுவினரைத் தொடர்ந்து பாட வந்தக் கிரிஷ் கல கலப்பாகப்  பேசி அரங்கத்தையும் மகிழ்ச்சியில்
 ஆழ்த்தினார்  ,மேலும் அனைத்து ரசிகர்களையும்  தனது  இனிமையான பாடல்களால்  கவர்ந்தார்.
                               
                                   " காணி நிலம் வேண்டும் பராசக்தி
                                     காணி நிலம் வேண்டும் " என்று அன்றே சொன்னான் பாரதி நமது இசை நிகழ்ச்சியின்
 நோக்கமும் இதேதான் 'அட்லாண்டாவில் தமிழ் மையம் '  இதனைப்  பற்றி  திரு .தங்கமணி  அவர்கள் நிகழ்ச்சியில்
 தெளிவுப்படுத்தினார்.இசை நிகழ்ச்சி நம்மையெல்லாம் மகிழ்வித்ததோடல்லாமல்,  நமது உயரிய நோக்கம் நிறைவேற
உறுதுணையாய்  முடிந்தது என்பதில் நமது அட்லாண்டா  தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சியடைகிறது, மேலும் இத்தகைய
 வெற்றியை அடைய உதவிய உயர்ந்த உள்ளங்களாகிய உங்களுக்கும் தமிழ்  சங்கம் நன்றியை சமர்ப்பிக்கின்றது  .
                      
                       இமை நேரமும் உன்னை மறக்க மாட்டோம்
                       எம் கடன் ஆற்றாமல் இறக்க மாட்டோம்
                       அமுதத் தமிழைத் துறக்க மாட்டோம்
                       தனக்கென வாழ்ந்தது சாவுக்கொப்பாகும்
                        தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும்
                        தமிழே உனக்கு வணக்கம் .
                                                          - பாரதிதாசனார் .

மேற்கண்ட பாரதிதாசனாரின் வாக்கிற்கேற்ப  விரைவிலேயே நமது இலக்கை  நம்  முயற்சியாலும் ,தமிழ் மக்களின்
ஒத்துழைப்பாலும்   அடைவோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .
                                         வாழ்க தமிழ் !வளர்க தமிழ் மொழி !


No comments:

Post a Comment