அன்று,
வெள்ளையரை வெளியேற்ற
வேட்கை கொண்டு எழுந்தோம்
வீரத்தின் விளைநிலத்தில்
வெற்றிகனிகள் பறித்தோம்
இன்றோ,
கொள்ளையர்கள் நம்மில்
கொக்கரித்தத் திரிகின்றனர்!
நம் உணவை தின்று நம்மை
உண்ணாவிரதம் இருக்கச் செய்கின்றனர் .
ஒருபுறம்,
தம்மை இம்சித்து
அகிம்சை வளர்க்கும் அன்ன ஹசாரேக்கள்!
தத்தளிக்கும் மனிதநேயம்
தலை தூக்கும் தனிமனித விமர்சனம்
அடக்கிப் பார்க்கும் அதிகாரங்கள்
அசைத்துப் பார்க்கும் அதிகாரிகள்-கை
கொட்டி சிரிக்கும் பெருந்தலைகள்-இவையெல்லாம்
தொடக் கூட முடியவில்லை
தொடங்கியது தர்ம யுத்தம் !
மறுபுறம் ,
பணந்தின்னிக் கூட்டமவை
இனம் அறியா ஈசலவை
அன்பில்லா உயிர்கள் அவை
பண்பில்லா விஷ பயிர்கள் அவை
நீட்டி முழக்கி கொடுத்த
நீள விளக்கமெல்லாம் -நம்
செவியை நோக்கிக் கூட
வர மறுத்து
நொடியிலே பொசுங்கியது !
நொடியிலே பொசுங்கியது !
மூன்று வேலை உன்று வந்து
முடித்துக் கொள் உண்ணாவிரதம்-என
மூக்கால் அழுது நின்று
முடியாமல் முழிபிதுங்கும்
முதல் மரியாதை ஆத்மாக்களே!
கேட்டதை கொடுத்து விட்டால்
கூண்டோடு கைலாசம் என
குமுறி நிற்கும் கூட்டங்களே!
நாணயத்திற்கு எத்தனை பக்கம் என
நாணமில்லாமல் கேட்கும்
நல்லவர்கள் நீங்கள்!
நல்ல சட்டம் கொண்டு வர
நாட்டு சட்டம் இடம் தராது எனக் கூறும்
வல்லவர்கள் நீங்கள்!
உள்ளதைச் சுரண்டும்
ஊழல் பெருச்சாளிகள்!
உழைப்பவரை உருக்கும்
லஞ்சத்தின் லட்சாதிபதிகள்!
இவரெல்லாம் ,
வளர்ந்தது நம்மால்
வாழ்வது நம்மால்
லஞ்சம் கொடுத்த நாமும்
வெட்கித்தான் ஆக வேண்டும் !
போனது போகட்டும் ,
இனி ஒரு புரட்சி செய்வோம் ,
நேர்மை தழைக்கச் செய்வோம்,
நாணயம் துளிர்க்க செய்வோம்,
உண்ணாமல் உருகிக் கிடப்போருக்கு
ஊக்கமாய் இருப்போம்-தனி
தாக்கத்தைக் கொணர்வோம்!
கத்தியின்றி ரத்தமின்றி
அகிம்சையிலே ஜெயிப்போம் !
கரை படிந்த கைகளுக்கு
கண்டனத்தை வைப்போம் !
உணமையை வளர்ப்போம்!-அதுவரை
ஊணுறக்கம் மறப்போம் !
ஊணுறக்கம் மறப்போம் !
வாழ்க இந்தியா !வளர்க இந்தியன் நேர்மை!
No comments:
Post a Comment