10/16/19

தமிழர்க் கூட்டம் !

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !

தரணியெங்கும் தழைத்தோங்கும் தாய்த்தமிழே -உன்னை 

தலை குனிந்து வணங்கி நிற்கும் தமிழர்க் கூட்டம் !

தேசம் பல தேடி ஓடும் நதிகள்  நாங்கள் -எனினும் 

தெள்ளுத் தமிழ்க்  கடலில் சேரும் தமிழர் நாங்கள் !

நீதிக்கும், நேர்மைக்கும் பஞ்சமில்லை -இங்கு 

வீரமும் ,தீரமும் குறையவில்லை 

கொடையும் ,கொள்கையும் மறக்கவில்லை -இன்னும் 

பண்பும் ,பாசமும் மறையவில்லை 

ஆடைகள் சில ,பல மாறினாலும் -எங்களுள் 

ஆதியும் ,அந்தமும் அழியவில்லை 

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !

நாவில் பல மொழிகளிங்கே நர்த்தனமாடும் -ஆனால் 

நாடியிலே தாய்த்தமிழின் குருதியே ஓடும் !

திரை கடல் ஓடியே திரவியம் தேடிய தீரன் -இவன் 

திக்கெங்கும் தமிழ் மணக்க திரவுகோளிட்ட வீரன் .

தமிழினையே காற்றாக்கி மூச்சிழுக்கும் தமிழன் -இவன் 

தமிழுக்காய் மூச்சிழுத்து தமிழ் வளர்க்கும் தமிழன் .

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !

எத்திசையும் தமிழ் மணக்க எழுச்சி கொண்ட தமிழா 

என்றென்றும்  தமிழோடு துணிந்து நடை பயில்வாய்!

தொன்மையும் ,வளமையும் கொண்டிருக்கும் தமிழா 

தொய்வின்றி நீ  நின்று தமிழனாய் வாழ்வாய் !

ஒன்றிணைந்து உறுதிபட தமிழோடு வாழ்வோம்  -நாம் 

தமிழராய் நானிலத்தில் தலை நிமிர்ந்து மிளிர்வோம் .

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !
                   
No comments:

Post a Comment